“இனி இல்லத்தரசிகளுக்கு விரைவில் 1000 ரூபாய் வழங்கப்படும்” என்று, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உறுதி அளித்து உள்ளார்.

அதாவது, “தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை” திமுக தேர்தலின் போது, அறிக்கையாக அறிவித்து இருந்தது.

திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பலரும், இதற்கு பெரும் பரவேற்பு தெரிவித்தனர். ஆனால், தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பல திட்டங்களை அமல்படுத்தி வந்தாலும், திமுக அரசு கூறிய இந்த ஒரு குறிப்பிட்ட திட்டம் தொடங்கப்படாமல் தொடர்ந்து தள்ளிக்கொண்டே போனது.

அதுவும், தமிழ்நாட்டில் நிலவி வந்த கொரோனா தொற்று பரவல், அதனால் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. 

இதனால், தமிழகத்தில் உள்ள இல்லத்தரசிகள் இடையே, “எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும்?” என்கிற ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. 

இதன் காரணமாக, “பெண்களின் நலன் கருதி, இந்த திட்டத்தை மிக வேகமாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என்று, பொது மக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் தான், “இல்லத் தரசிகளுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் துவங்கப்படும்” என்று, ஆர்.எஸ்.பாரதி உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

அதாவது, கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு, “வேருக்கு விழா” என்கிற தலைப்பில், இல்லற இணையரங்கம் நிகழ்ச்சியானது சென்னை ஓட்டேரியில் நடைபெற்றது. 

இந்த விழாவில் கலந்துகொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 9 இளம் ஜோடிகளுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், இந்த விழாவில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “9 பேருக்கு திருமண நிகழ்ச்சி, வசதியற்றவர்களுக்கு உரிய முறையில் திருமணம் நடந்திருக்கிறது என்றும், சுயமரியாதை மற்றும் வைதீக திருமணம் இரண்டும் கலந்து இங்கு நடந்து உள்ளது” என்றும், பெருமையோடு குறிப்பிட்டார். 

அத்துடன், “நான் கலைஞர் தலைமையில் திருமணம் செய்துகொண்டவன் என்றும், என் பிள்ளைகளும் கலைஞர் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும், சுயமரியாதை திருமணம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த திருமணங்கள் எடுத்துரைக்கின்றன” என்றும், எடுத்துரைத்தார். 

மேலும், “பெண்களின் திருமண வயதை உயர்த்தியவர் பெரியார் என்றும், இப்போது ஒவ்வொரு பெண்ணும் படிக்க மாதம் 1000 ரூபாய் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்” என்றும், சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, “பெண்கள் படிப்பு முடித்து யாரையும் எதிர்பார்க்காமல் இருக்க இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார் என்றும், அதிமுக ஆட்சியில் ரேஷன் கார்டு முறையில் பெரிய குளறுபடி ஏற்பட்டு உள்ளது” என்றும், சுட்டிக்காட்டினார். 

“அதனை சரிசெய்யும் பணி தற்போது நடைபெறுகிறது என்றும், பணிகள் முடிந்து கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பிறகு அண்ணா அல்லது கலைஞர் பிறந்தநாளில் இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார். இதனால், மிக விரைவிலேயே “இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படுவது” கிட்டதட்ட தற்போது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், அடுத்த 60 நாட்களில் செயல்படுத்தப்படும்” என்று, அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்து உள்ளார். 

மேலும், “அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டங்கள் உள்ளது” என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து உள்ளார்.