“சென்னையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், ஆனால் போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை” என்றும், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “தமிழ்நாட்டில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக, கடந்த ஆண்டை விட சென்னையில் 3 மடங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக“ கவலைத் தெரிவித்தார். 

“சென்னையில் 20 சதவீத அளவிற்கு, கொரோனா பரிசோதனையின் போது, தொற்று உறுதி செய்யப்படுவதாகவும்” அவர் வேதனை தெரிவித்தார்.

அத்துடன், “சென்னையில் தற்போது 33,500 பேர் கொரோனா சிகிச்சையில் இருப்பதாகவும், இவர்களில் மூன்றாயிரத்து 500 முதல் 4 ஆயிரம் பேர் வரை, உயர் சிகிச்சை தேவைப்படுகிற நிலையில் உள்ளனர்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

மேலும், “18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டமானது, இன்று அமலுக்கு வர வாய்ப்பு இல்லை என்றும், அதற்கு காரணம் போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை” என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்தார். 

அதே நேரத்தில், “தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

குறிப்பாக, “சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், அப்படி வரும் தகவல்களில் உண்மை இல்லை”  என்றும், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்தார்.

அதே போல், “சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலை தடுப்பது சவாலாக இருப்பதாக” சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கவலைத் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “30 சதவீத நோயாளிகள் மட்டுமே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக” குறிப்பிட்டார். 

மேலும், “ரெம்டெசிவர் மருந்து கள்ளச் சந்தையில் விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அவர் மிக கடுமையாக எச்சரித்தார். 

முக்கியமாக “ஒன்றரை கோடி தடுப்பூசிகள் ஆர்டர் கொடுத்திருந்தாலும், அவை எப்போதும் வந்து சேரும் என்பது கேள்விக்குறியாக உள்ளதால், இன்று தடுப்பூசி போடுவது சந்தேகமே” என்றும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.