“கொரோனா எதிரொலியாகப் பொதுமக்கள் அடுத்த 10 நாட்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில், அறுவை சிகிச்சை பிரிவில் 150 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளையும், அதே வளாகத்தில் எஃப் பிளாக்கில் 100 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளையும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று காலை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் மட்டுமே அரசு மூலம் ரெம்டெசிவர் மருந்து வினியோகம் செய்யப்படுவதாக” குறிப்பிட்டார்.

அத்துடன், “கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவர் மருந்து அவசியம் இல்லை என்றும், நோய் பாதித்த 30 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து தேவைப்படும்” என்றும், அவர் அப்போது விளக்கம் அளித்தார்.

மேலும், “தனியார் மருத்துவமனைகள் தேவையில்லாமல், அனைத்து நோயாளிகளுக்கும் ரெம்டெசிவர் மருந்தை பரிந்துரை செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கையாகவே கூறினார்.

குறிப்பாக, “தமிழகத்தில், கொரோனா தொற்றின் 2 வது அலை மிக வேகமாகப் பரவி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு பொது மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையாகவும், மிகுந்த கவனமாகவும் இருக்க வேண்டும்” என்றும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

அதே போல், “ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்” என்றும், அவர் தெரிவித்தார். 

“சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவலைத் தடுப்பது சவாலாக உள்ளது” என்றும், ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.

“கொரோனா தொடர்பான சந்தேக‌ங்களுக்கு 104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், யாரும் கொரோனா பற்றி பயப்பட வேண்டாம்” என்றும்,  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.