பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த பள்ளி மாணவனிடம் 63,500 ரூபாய் பணம் பறித்த போலீஸ் அதிகாரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி செல்வம் என்பவரின் மகன் 17 வயதான கிங்ஸ்டன் கிஷோர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். 

இப்படியான சூழ்நிலையில், கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், மாணவன் கிஷோர், தனது பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார்.

அப்போது, மாணவன் கிஷோர், தனது பெற்றோருடன் சண்டை போட்டு விட்டு, வீட்டிலிருந்த 63,500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, சிவகங்கையில் இருந்து பேருந்து மூலம் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்று உள்ளார். அங்கு, அதிகாலை 2 மணியளவில் அந்த பகுதியில் ரோந்து பணியிலிருந்த சி.எம்.பி.டி காவல் நிலைய குற்ற பிரிவு முதல் நிலை காவலர்களான வேல்முருகன், அருண் கார்த்திக் ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வந்த மாணவன் கிங்ஸ்டன் கிஷோரை வழி மறித்து, அவரை தாக்கி உள்ளனர்.

அத்துடன், அந்த மாணவன் கையில் வைத்திருந்த 63,500 ரூபாய் பணத்தை அப்படியே, அந்த இரு போலீசாரும் பறித்துக் கொண்டு, அந்த மாணவனை அங்கேயே விட்டு விட்டு சென்று உள்ளனர்.

இதனால், கோயம்போட்டில் இருந்து எங்கு செல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிய மாணவன், இறுதியாக தனது தந்தை அந்தோணி செல்வத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்து உள்ளார்.

அப்போது, “வீட்டை விட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த போது என்னிடம் இருந்த பணத்தை போலீசார் இருவர் பறித்துக் கொண்டு, என்னை அடித்து தாக்கி விட்டனர்” என்று, கதறி அழுதுள்ளார். 

இதனைக் கேட்டு பதறிப்போன சிறுவனின் தந்தை, சிஎம்பிடி காவல் நிலையம் வந்து சட்டம் ஒழுங்கு ஆய்வாளரிடம் சம்மந்தப்பட்ட இரு போலீசார் மீது புகார் அளித்தார். 

மேலும், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர், சென்னை மதுரவாயல் உதவி ஆணையாளர் ரமேஷ் பாபுவை சந்தித்து போலீசார் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பற்றி கூற சிறுவனின் தந்தையை அழைத்துக்கொண்டு சென்றார்.

அப்போது, உதவி ஆணையர் ரமேஷ் பாபு, காவலர்கள் வேல்முருகன் மற்றும் அருண் ஆகியோரை விசாரித்த போது, சிறுவனிடம் பணம் பறித்த சம்பவம் உண்மை என்பது தெரிய வந்தது.

இந்த புகாரை அடுத்து, காவலர் வேல்முருகன் சிறுவனின் தந்தைக்கு போன் செய்து, “2 லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும், இந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், இதனை இப்படியே விட்டுவிடும் படியும்” கூறியதாகத் தெரிகிறது.

ஆனால், இதற்கு பதில் அளித்த சிறுவனின் தந்தை “2 லட்சம் ரூபாய் பணம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் என்றும், என் மகனிடம் அடித்து பறித்த பணத்தை மட்டும் கொடுக்க வேண்டும்” என்றும், கேட்டுக்கொண்டார்.

அதே நேரத்தில், “அப்படி பணத்தை கொடுத்தாலும் என் மகனை தேவையில்லாமல் தாக்கியதால், உங்கள் மீதான புகாரை வாபஸ் வாங்க முடியாது” என்றும், சிறுவனின் தந்தை மறுத்துவிட்டார்.

குறிப்பாக, உயரதிகாரிகள் விசாரணையில், சம்மந்தப்பட்ட போலீசார் இருவரும், சிறுவனிடம் மட்டும் பணத்தை பறித்துக்கொண்டது மட்டுமல்லாமல், காவல் நிலையத்துக்கு வருபவர்களிடம் மிரட்டி அதிக அளவு பணம் வாங்குவது, கடைகளை மிரட்டி பணம் வாங்கியது” போன்ற குற்றச் செயல்களில் அவர்கள் இருவரும் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதனால், சென்னை மேற்கு காவல் இணை ஆணையாளர் ராஜேஸ்வரி, “பள்ளி மாணவனிடம் ரூபாய் 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்ட 
சிஎம்பிடி காவல் நிலைய குற்றப் பிரிவு காவலர்கள் வேல்முருகன் மற்றும் அருண் கார்த்திக் ஆகிய இருவரையும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து” உத்தரவிட்டு உள்ளார்.

இதனிடையே, கொரோனா காலத்தில் பொது மக்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள இந்த நிலையிலையை தனக்கு ஜாதகமாக பயன்படுத்திக்கொண்ட அதிகாரம் மிக்க போலீசார் இருவர், சிறுவன் வைத்திருந்த பணத்தை அடித்துத் தட்டிப் பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம், பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.