“வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக” சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கொரோனாவின் 2 வது அலையானது, தமிழகம் உட்பட இந்தியாவையே சூறையாடி வருகிறது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொது மக்களின் கூட்டம் மருத்துவமனைகளை நோக்கி படையெடுத்து வருகிறது.

இதனால், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது 3 லட்சத்தை கடந்து நிற்கிறது. 

தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, ஜம்மு, அசாம், பீகார், குஜராத், அரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா என்னும் பெருந் தொற்றால், இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டாலும், நோயாளிகளை அனுமதிக்க இடங்கள் இல்லாததாலும், வீதிகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது.

இதனால், மருத்துவ உதவி கோரி அயல்நாடுகளில் கையேந்தும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு இருக்கிறது என்பது தான் உண்மையான விசயமாக இருக்கிறது. 

அத்துடன், வட மாநிலங்களில் நடந்து வரும் கொரோனா துயர சம்பவத்தைப் போன்று, தமிழகத்திலும் நடந்து விடுமோ என பொது மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். 

இதில், சென்னை மட்டுமின்றி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி மற்றும் வட சென்னையில் ராயபுரம், கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், அத்திப்பட்டு வியாசர்பாடி அரக்கோணம், திருத்தணி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. 

இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கொரோனா நோயாளிகளுக்காகப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதிகளைச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இன்று ஆய்வு செய்தார். 

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரகாஷ், “இனி வரப்போகும் காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக” கவலைத் தெரிவித்தார்.

மேலும், “கொரோனா வைரஸ் தொற்று பாதித்து உள்ள 13 சதவீதம் பேருக்கு, உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் போர்க்கால அடிப்படையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றும், அவர் கூறினார். 

“ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருகிறது என்றும், சென்னையில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

“சென்னையில் கூடுதலாக 3,000 ஆக்சிஜன் படுக்கைகள் அடுத்த 10 நாட்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும், வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்” என்றும், அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

“டிஎம்எஸ் கொரோனா மையம் மூலம் தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சை தரம் குறித்து கண்காணிக்கப்படும்” என்றும், அவர் உறுதி அளித்தார்.

“வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்” என்றும், அவர் அப்போது வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். 

குறிப்பாக, “உயிரிழப்புகளை முற்றிலும் தடுப்பதற்காக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றும், சென்னையில் 18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தைச் செயல்படுத்த இப்போது இயலாது” என்றும், அவர் தெரிவித்தார். 

முக்கியமாக, “தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகள் இன்னும் வராததால், 18 வயதானோருக்கான தடுப்பூசி திட்டத்தை இப்போது செயல்படுத்த முடியாது” என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், விளக்கம் அளித்தார்.