தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்கும் நிலையில், இறுதி முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.

“தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்?” என்கிற கேள்விக்கான விடை கிட்டதட்ட நாளை உறுதியாகத் தெரிந்து விடும். அதுவும், மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களாகத் திகழ்ந்த கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் இல்லாமல் நடைபெற்ற இந்த தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தான் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் சேர்த்து, 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப் பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் அனைத்தும் பத்திரமாகத் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களுக்குப் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. 

அதே போல்,  சென்னையில் 16 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் சென்னை ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இந்த மையங்களில் அப்போது முதல் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், 2 ஆம் தேதியான நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதனால், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

அதன் படி, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக அதிகபட்சமாக 4 மேஜைகள் போடப்படுகின்றன. ஒரு மேஜையில் 500 தபால் வாக்குகள் வரை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மின்னணு வாக்குகள் 14 மேஜைகள் போடப்பட்டு எண்ணப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதே போல், ஒரு மேஜைக்கு ஒரு நுண் பார்வையாளர் வீதம் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது. 

அத்துடன், சென்னையில் மட்டும் ஆயிரத்து 248 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள். 

மேலும், தமிழகம் முழுவதிலும் உள்ள 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. கொரோனா பரவலால் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேசைகள் அமைக்கப்பட உள்ளன. 

ஒவ்வொரு மேசையிலும் தேர்தல் பணி மேற்கொள்ளும் ஒரு அலுவலரும், ஒரு வேட்பாளருக்கு 14 முகவர்களும், ஒரு முதன்மை முகவரும் அனுமதிக்கப்படுவர். முகவர்கள் அனைவரும் கூண்டுக்கு வெளியே இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டுப்பாட்டு இயந்திரத்தை முகவர்களுக்கு உயர்த்தி காட்டுவார். முதலில் பொத்தானை அழுத்தியதும் எந்த சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி என்ற விபரமும், அதைத் தொடர்ந்து எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டனர், மொத்தமாகப் பதிவான வாக்குகள் எவ்வளவு எந்த வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகின என்பதும் திரையில் தோன்றும்.

வாக்குப் பதிவு முடிந்த பின்பு 17-சி விண்ணப்பம் மூலம் ஒரு வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளில் விபரங்கள் கட்சி முகவர்களுக்குத் தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின் போது இதை ஒப்பிட்டு, பதிவான மொத்த வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால் கட்சி முகவர்கள் கேள்வி எழுப்பலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

முக்கியமாக, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேசைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளதால், முழுமையான தேர்தல் வெற்றி நிலவரத்தை அறிய நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டிச் சூழல் உருவாகலாம் என்றும், தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.