தொலைதூர பயணம் பஸ் கட்டண உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு நிதிசுமையில் உள்ள நிலையில் விரைவில் போக்குவரத்து கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கட்டண உயர்வு தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிதிபற்றாக்குறை காரணமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கடனாக  6.53 லட்சம் கோடி உள்ளது இந்தநிலையில்  திமுக அரசு பதவியேற்ற ஒரு வருட காலத்தில் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திர பதிவு முத்திரை கட்டணம், டாஸ்மாக் கட்டணம் போன்றவற்றை தமிழக அரசு  உயர்த்தி உள்ளது. இந்தநிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் கட்டணம் மற்றும் பராமரிப்பு பணி போன்றவற்றால் போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பேருந்து கட்டணம் உயர இருப்பதாக தகவல் வெளியானது. அமைச்சர் நேருவும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கட்டண உயர்வை முதலமைச்சர் அறிவிப்பார் என ஏற்கனவே கூறியிருந்தார். இதற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.

அதனைத்தொடர்ந்து பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல நிதித்துறை சார்பாகவும் மின்சாரம் மற்றும் போக்குவரத்து கட்டணத்தை கட்டாயம் உயர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் பேருந்து கட்டணம் உயர இருப்பதாக வெளியான தகவல் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும்  ஆந்திரா, கேரளா அரசு பேருந்துகளில் உள்ள தொலைதூர பயணப் பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து அதற்கேற்ப தமிழக போக்குவரத்துதுறை அதிகாரிகள் கட்டண உயர்வு பட்டியலை தயார் செய்துள்ளதாக தெரிவித்தார். ஆனால், கட்டண உயர்வு குறித்து தமிழக  முதலமைச்சர் இதுவரை எந்த வித உத்தரவும் வெளியிடவில்லை எனவும்  அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். எனவே பேருந்து பயண கட்டணம் உயர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.