சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த  தனியார் கல்லூரி மாணவி கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீஸ் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே இரண்டாம் கட்டனை பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று  மகள்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகின்றனர். இந்நிலையில் 22 வயதுடைய மூன்றாவது மகள் சென்னையில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் அவர்கள்  அனைவரும் ஒரே வீட்டில்  தனித்தனி அறையில் வசித்து வரும் நிலையில் புதன் கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் அவரவர் அறைக்கு உறங்க சென்றுள்ளனர். இந்நிலையில், இரவு 2 மணி அளவில் வீட்டில் மாடியில் உள்ள தனது அறையில் தனியாக படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது, அறை கதவை யாரோ தட்டுவது போல் சத்தம் கேட்டுள்ளது.

சத்தம் கேட்டு வந்த கல்லூரி மாணவி கதவை திறந்து பார்த்த போது அடையாளம் தெரியாத நபர் அறையின் உள்ளே நுழைந்து, நெற்றியில் கையால் தாக்கி, கையை முறுக்கி பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வீட்டின் பின்புறம் உள்ள மரத்தின் வழியாக இறங்கி சென்றுள்ளார்.

இந்நிலையில் செய்வதறியாது திகைத்த கல்லூரி மாணவி இது குறித்து தனது அக்காவிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த மாணவி கோவூரில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேரில் வந்த போலீஸார் சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.வீட்டில் தனது அறையில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை  கத்தி  முனையில் மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.