மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள படம் விக்ரம். உலகநாயகன் கமலஹாசன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. முன்னதாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று (மே 15) நடைபெற்ற விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் ரிலீஸானது.

முன்னதாக அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடி வழிவந்த பத்தல பத்தல பாடல் ட்ரெண்டானது. விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் படத்தின் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர் அந்த வகையில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் கமல்ஹாசனுடன் இணைந்து விரைவில் பணியாற்ற உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து விக்ரம் படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விக்ரம் திரைப்படத்தில் உலக நாயகனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து பேசினார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க மிகவும் ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.