உலகநாயகன் கமல்ஹாசனின் பக்கா ஆக்ஷன் ட்ரீட்டாக தயாராகி இருக்கும் விக்ரம் திரைப்படம் வருகிற ஜூலை 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்தின் அதிரடியான ட்ரைலர் நேற்று மே 15ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

உலக நாயகனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஆண்டனி வர்கீஸ், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, சிவானி, மகேஸ்வரி, மைனா நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது

நேற்று (மே 15) விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அனிருத் உள்ளிட்ட விக்ரம் படத்தின் படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிலம்பரசன்.TR மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் உலக நாயகனுடன் இணைந்து விரைவில் புதிய படத்தில் பணியாற்ற மிகுந்த ஆர்வத்தோடு இருப்பதாக தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடித்ததிலேயே விருமாண்டி திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் என்றும் அது போன்று மதுரையை சார்ந்த ஒரு கதை களத்தில் கமல்ஹாசனுடன் இணைய விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய உலக நாயகன் கமல்ஹாசனும் பா.ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளதாக தெரிவித்துள்ளார்.கூடிய விரைவில் இதற்கான நடக்கும் எனவும் தெரிவித்தார். உலகநாயகன் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் இருவரும் இணைவது குறித்து அவர்களே தற்போது உறுதியளித்துள்ள நிலையில், இந்த கூட்டணியில் தயாராகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.