சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன், நிதி அகர்வால், பாரதி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள ஈஸ்வரன் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பில் சிம்பு பாம்பு பிடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது. சிம்பு நிஜ பாம்பை பிடித்தார் என்று கூறி சென்னையை சேர்ந்த விலங்கு ஆர்வலர் ஒருவர் வனத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து பாம்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு சிம்பு மற்றும் படக்குழுவுக்கு வனத்துறை அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார்.

படத்தில் பயன்படுத்தப்பட்டது நிஜப் பாம்பு இல்லை என்று சுசீந்திரன் விளக்கம் அளித்தார். ஆனால் அதற்கான ஆதாரங்களை சமர்பிக்குமாறு வனத்துறை கேட்டது. இதையடுத்து சுசீந்திரன் நேரில் ஆஜாராகி ஆதாரங்களை அளித்து விளக்கினார். படத்தில் பயன்படுத்தப்பட்டது இது தான் என ரப்பர் பாம்பை வனத்துறை அதிகாரிகளிடம் அளித்துள்ளார் சுசீந்திரன். 

மேலும் கிராபிக்ஸ் காட்சிகளையும் போட்டுக் காண்பித்துள்ளார். சுசீந்திரன் அளித்த விளக்கம் திருப்திகரமாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாம்பு பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக தீபாவளி அன்று ஈஸ்வரன் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. டீஸருக்கு அமோக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார் சுசீந்திரன். 

சிம்பு தன் உடல் எடையை 30 கிலோ குறைத்த பிறகு நடித்துள்ள முதல் படம் ஈஸ்வரன் என்பதால் அதன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் படப்பிடிப்பை ஒரு மாதத்திற்குள் நடத்தி முடித்துவிட்டார் சுசீந்திரன். மேலும் ஈஸ்வரன் படத்திற்கான டப்பிங் பணிகளையும் நிறைவு செய்தார் சிலம்பரசன். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் தற்போது நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கி புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. 

முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். மாநாடு படத்தின் இரண்டு லுக் போஸ்டர்கள் நேற்று வெளியாகி இணையத்தை அசத்தி வருகிறது.