மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் பழமையான நடைமுறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வரலாற்று நடவடிக்கையில், செப்டிக் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளை தானாக சுத்தம் செய்வது கட்டாயமாக்குவது குறித்து  சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு  கையால் மலம் அள்ளும் அவலநிலை முடிவுக்கு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை சாதியின் பெயரால் ஒரு சமூகம் காலம் காலமாக மிக மோசமான தொழிலை செய்துக் கொண்டிருக்கிறது. மறைக்கப்பட்ட படுகொலைகளும், அரசாங்கத்தால் தூண்டப்பட்டு பாதாளக் குழிகளில் இறக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோரின் மரணங்களும் ஊடகங்களுக்கு கூட தெரியாமல் மறைக்கப்பட்டவை ஏராளமானவை. 

மலக்குழிக்குள் தங்கள் உயிரை இழந்த எத்தனையோ குடும்பங்கள் இன்றும் அதே தொழிலை தான் செய்து கொண்டிருக்கின்றன. மலம் அள்ளும் வேலையை மனிதர்கள் செய்வது என்பதே நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத நேரத்தில் ஒரே சமூகம் மீண்டும் மீண்டும் அந்த பாதாளக் குழிக்குள் தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்த சமூகம் இந்த வேலையை இனி செய்யக் கூடாது என்றும், அவர்களுக்கான மாற்று வேலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றூம் எத்த்னையோ போராட்டங்கள் வாயிலாகவும், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் என பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் ஜெய்பீம் மன்றம் மற்றும் கட்டியக்காரி நாடகக் குழு இணைந்து “மஞ்சள்” என்ற  நாடகத்தை சென்னையில் நடத்தினர். 

அதே போல் திவ்யபாரதி எடுத்த “ கக்கூஸ்” என்ற ஆவணப்படம் இந்தியா முழுக்க மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது. அதற்கு தடையும் விதிக்கப்பட்டது. இப்படி பலவகையான முயற்சிகளை ஒவ்வொருவரும் எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள இடது ஜனநாய முற்போக்கு அரசு கையால் மலம் அள்ளும் நிலையை மாற்றி அதற்கான மாற்று வழியை நோக்கி சென்றது. 

மலக்குழிகளையும் பாதாள சாக்கடைகளையும் சுத்தம் செய்ய கேரள அரசு ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்தது. 

ஜென்ரோபோடிக்ஸ் என்ற தனியார் நிறுவனம் தயாரித்த இந்த ரோபோவுக்கு பெருச்சாளி என்று பெயர் வைத்தது.

இந்த ரோபோவை திருவனந்தபுரத்தில் 5 ஆயிரம் பாதாள சாக்கடைகளில் சோதனை செய்து பார்த்ததில் அனைத்திலும் வெற்றி பெற்றது. தற்போது இந்த ரோபோவுக்கான மொத்த செலவையும் கேரள அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

ப்ளூடூத், வை-பை கண்ட்ரோல் பேனல் உள்ளிட்ட அவற்றை கட்டுப்படுத்தும்சாதனங்களும் கழிவுகளை அள்ள வாளி, துடுப்பு போன்ற பொருட்களும் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோவை 9 இளைஞர்கள் கொண்ட குழு கண்டுபிடித்துள்ளது. இதை வெற்றிகரமாக நடைமுறைக்கும் கொண்டு வந்தது. 

இதே போல் தமிழகம் மட்டுமின்றி , இந்தியா முழுவதும் இதை நடைமுறைப்படுத்த அனைவரும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் நவம்பர் 19 உலகக் கழிவறை தினத்தை முன்னிட்டு மையம் இந்த முடிவை அறிவித்திருக்கிறது.

துப்புரவு இயந்திரங்களை வாங்குவதற்காக நகர்ப்புற விவகார அமைச்சகமானது  குடிமை தொழிலாளர்களுக்கு நிதி வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ பயன்பாட்டில், 'மேன்ஹோல்' என்ற வார்த்தை 'இயந்திர துளை' என்று மாற்றப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வரவுள்ள இந்த கையால் மலம் அள்ளும் அவலம் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த சமூகத்தில் கொண்டு வரும்.