இளம் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞன் முதல், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 66 வயது முதியவர் வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருவது அந்த மாவட்ட மக்களை கடும் அதிர்ச்சியிலும், பீதியிலும் ஆழ்த்தி உள்ளது.

புதுக்கோட்டையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருவது வேதனை அளிக்கிறது. தற்போது, அந்த மாவட்டத்தில் 3 விதமான பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ச்சியாக, அடுத்து அடுத்து நிகழ்ந்து உள்ளது, அந்த மாவட்ட மக்களை கடும் அதிர்ச்சியடையச் செய்து உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் நத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரும், அந்த பகுதியில் தினசரி வேலைக்கு சென்று வந்துள்ளார். 

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், 10 ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே, அந்த இளைஞரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இப்படியாக, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் காதலிக்கத் தொடங்கியது முதலே, “திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள்” கூறி, அந்த இளைஞர், அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அந்த பெண் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து மறுத்த போதிலும், அந்த இளைஞர் விடாமல் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த இளைஞர் கடந்த சில நாள்களாக, காதலியின் செல்போன் அழைப்பை ஏற்காமல் இருந்து வந்துள்ளார். அதே நேரத்தில், அந்த இளைஞர், தனது வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளார். இந்த தகவல் எப்படியோ, அந்த இளம் பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், கடந்த 11 ஆம் தேதி, இளைஞர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட இளைஞரை அழைத்து போலீசார், விசாரணை செய்து உள்ளனர். இந்த விசாரணையில், “அந்த இளைஞர், காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு, தன் காதலியை திருமணம் செய்து கொள்ள மறுப்பு” தெரிவித்துள்ளார்.

போலீசாரின் தொடர் விசாரணைக்கு பிறகு, அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அத்துடன், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம் பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடி பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 66 வயதுடைய கருப்பையா என்ற முதியவருக்கு, 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்து உள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமிக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதே போல், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காகவும், சிறுமியின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காகவும், சம்மந்தப்பட்ட நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.