சமூக வலைதளங்களில் தனிநபர்மீது அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்கிற கேரள அரசின் அவசர சட்டத்திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சமீக காலமாக சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. அதேபோல சமூக வலைதளங்களில், அவதூறு பரப்புவது, சைபர் க்ரைம் குற்றங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. 

சுயலாபத்திற்காக பொய்யான தகவல்களை பரப்புவது, தனிநபர் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிடுவது போன்ற சம்பவங்களால் சமூக வலைதளங்களில் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில்,இது போன்ற குற்றங்களை தடுக்கும் வகையில் கேரள அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலீஸ் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். 

அதன்படி கேரள போலீஸ் சட்டத்தில் பிரிவு 118ல் 118ஏ என்ற ஓர் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, போலீஸாருக்குகூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி ஒரு தனநபரின் மரியாதையை, மாண்பைக் குலைக்கு உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைப் ,படங்களை, பதிவேற்றம் செய்தால், பரப்பினால், அல்லது பிரசுரித்தால், அவருக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம், 5 ஆண்டு சிறை விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே இச்சட்டத்திற்கு ஆதரவு கிடைத்த போதிலும் எதிர்க்கட்சிகள் சார்பில் விமர்சனங்களும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

குறிப்பாக இச்சட்ட திருத்தம் கருத்து சுதந்திரத்தையும் பத்திக்கை சுதந்திரத்தையும் பறிப்பதோடு, காவல்துறைக்கு அதிகமான அதிகாரத்தை அளிக்கும் என்றும் எதிர்கட்சிகள் விமர்சனம் எழுப்பியுள்ளன.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இக்குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இந்த அவசரச் சட்டம் ஆதாரங்கள் அடிப்படையில், சமூக வலைத்தளத்தில் தனிநபர்களின் மரியாதையை, மாண்பைக் குலைக்கும் வகையில் பதிவிட்ட கருத்துக்கள், அவர்கள் அடைந்த பாதிப்புகளை அடிப்படையாக வைத்தே கொண்டுவரப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த இந்த சட்டத்திருத்தம் பெருமளவு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம்,  சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் மத்தியிலும் இது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

- பீட்டர் ரெமிஜியஸ்