தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யக் கோரி தாக்கல் செயப்பட்ட பொதுநல வழக்கிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு இந்தியாவில் அறிமுகம் ஆனதில் இருந்தே இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடுவோர் எண்ணிக்கை அதிகமானது. ஆரம்பத்தில் நிறைய பணம் கிடைப்பது போன்ற பிம்பத்தைக் கொடுத்தாலும் ஆன்லைன் ரம்மி என்கிற சூதாட்டம் மெல்ல மெல்ல இளைஞர்களை அடிமையாக்கியது. 

அதில் தொடர் தோல்விகளால் மன உளைச்சலுக்கு ஆளான நபர்கள் கடன் தொல்லைக்கும் அதன் நீட்சியாக தற்கொலைக்கும் ஆளாயினர்.

முன்னதாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ராஸ்வீ, மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் “நெறிமுறையற்ற ஆன்லைன் விளையாட்டுகளை பிரபலப்படுத்துவதில், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, சவுரவ் கங்குலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், தமன்னா, ராணா டகுபதி, சுதீப் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டம், சீட்டாட்டங்களை தடை செய்ய வேண்டும். பிரபலப்படுத்தும் துாதுவர்களாக செயல்படும் கிரிக்கெட் வீரர், நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.  

அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் சார்பில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சார்பாக அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க கோரி மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மற்றொரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 18ஆம் தேதி நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்தும் அதற்கான கால அவகாசம் குறித்தும் நீதிபதிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்படும் என்றும், அதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி தற்கொலை வரை போவதைச் சுட்டிக்காட்டினர். 

மேலும் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு, 1930ஆம் ஆண்டு சூதாட்ட தடுப்பு சட்டம் மற்றும் பல பிரிவுகளின் கீழ் சட்டம் இயற்ற அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. ஆன்லைன் ரம்மி பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தண்டிக்கவும் இது வழிவகுக்கும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். 

மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், "ஆன்லைன் ரம்மி விளையாட்டு தமிழ் நாட்டில் தடை செய்யப்படுகிறது. தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை. மேலும் ஆன்லைன் ரம்மி அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதம் மற்றும் 2 வருடம் சிறை தண்டனை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளைஞர்களின் பணத்தையும் உயிரையும் பறித்து வந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டது தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னரே தெலுங்கான, ஆந்திரா, ஓடிஸா மற்றும் நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி தடை மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- பீட்டர் ரெமிஜியஸ்