தமிழ் திரையுலகில் பிஸியான ஹீரோக்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைந்து ஒரு குட்டி லவ் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு நடிகை டாப்ஸியுடன் ஆனபெல் சுப்ரமணியம் படத்தில் நடித்து முடித்தார். 

இயற்கை, ஈ, பேராண்மை போன்ற சிறந்த படைப்புக்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமூக அக்கறை மிகுந்த கதையை பேசும் ஜனநாதனின் திரைமொழிக்கு தனி ரசிகர்கள் உண்டு. புறம்போக்கு படத்தில் விஜய் சேதுபதியை இயக்கிய ஜனநாதன், இரண்டாவது முறையாக லாபம் படத்தில் இயக்கி வருகிறார். 

ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் லாபம் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதியுடன் டேனியல் ஆனி பாப், கலையரசன் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். 

படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதியை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் கும்பலாக திரண்டனர். குறிப்பாக குழந்தைகள் விஜய் சேதுபதியை நோக்கி கையசைத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களை சந்தித்த பிறகே மேக்கப் போட செல்கிறார் மக்கள் செல்வன். 

கடந்த மாதம் 800 திரைப்படத்தில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியதால் முரளிதரனின் விடுத்த அறிவிப்பை ஏற்று விலகினார். அதைத் தொடர்ந்து டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தின் படப்பிடிப்பில் இணைந்து நடித்தார். 

மலையாளத்தில் மார்க்கோணி மத்தாயி என்ற படத்திற்கு பின்னர் விஜய்சேதுபதி இரண்டாவதாக நடிக்கும் மலையாளப் படம் 19 (1) (a). இப்படப்பிடிப்பு கேரள மாநிலம் தொடுபுழாவில் துவங்கி நடைபெற்று முடிந்தது. நடிகை நித்யா மேனன் மற்றும் இந்திரஜித் சுகுமாரன் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். வி.எஸ்.இந்து இயக்கி வருகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். 

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.