கடந்த வருடம் கொரோனா வைரஸ் உருவானது. இதுவரை உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பலவும் பொது முடக்கத்தை அறிவித்தன. அதோடு உலகம் முழுக்க உள்ள சினிமா பிரபலங்களும், இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யாவுக்கு தொற்று ஏற்பட்டது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம் எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தனது அண்ணன் சூர்யா, நலம் பெற்று வீடு திரும்பி விட்டதாக நடிகர் கார்த்தி தற்போது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், அண்ணன் பாதுகாப்புடன் வீடு திரும்பியுள்ளார். சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தல் இருப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும் சூர்யாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இது சூர்யா நடிப்பில் உருவாகும் 40-வது படமாகும். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சூர்யா 40 என அழைத்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

சூர்யா 40 படத்தின் ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எனத் தீவிரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு. சூர்யாவுக்கு நாயகியாக டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். 

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.