“தேசத்துக்கு எதிராக மத்திய அரசு தான் செயல்படுகிறது.. விவசாயிகள் அல்ல” என்று, பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 75 வது நாளை கடந்து, 100 வது நாளை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. எனினும், மத்திய அரசு இதுவரை அந்த சட்டங்களைத் திரும்பப்பெற வில்லை. 

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் சஹரன்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் பொதுக் கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார்.

அப்போது, நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா காந்தி, “ 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு, பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் அவமரியாதை செய்து உள்ளனர்” என்று, குற்றம்சாட்டினார். 

“விவசாயிகள் போராட்டம் நடத்துவது ஏன் என்பது மத்திய அரசுக்கு இன்னும் புரியவில்லை” என்றும், அவர் குறிப்பிட்டார்.

“உரிமைக்காகப் போராட்டம் நடத்தும் விவசாயிகளை, தேச விரோதி என மத்திய அரசு கூறுகிறது என்றும், ஆனால் மத்திய அரசு தான் தேசத்திற்கு எதிராகச் செயல்படுகிறது” என்றும், பிரியங்கா காந்தி மிக கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, “பாக்கிஸ்தான், சீனா செல்வதற்கு எல்லாம் நேரமிருக்கும் பிரதமர் மோடிக்கு, நாட்டில் அடிப்படை உரிமைக்காகப் போராடி வரும் விவசாயிகளைச் சந்திக்கத் துளியும் நேரம் இல்லையா?” என்றும், கேள்வி எழுப்பினார். 

“காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சிக்கு வந்தால், புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்” என்றும், பிரியங்கா காந்தி உறுதிப்படத் தெரிவித்தார்.

மேலும், அங்கு நடைபெற்ற கிசான் பஞ்சாயத்துக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு பேசிய போதும், மோடி அரசையும், பாஜகவையும் மிக கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “3 புதிய விவசாயச் சட்டங்களும் மிக பயங்கரமானது என்றும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தச் சட்டங்களைத் தூக்கி எறிவோம் என்றும், அது வரை சட்டங்களை ரத்து செய்ய காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்” என்றும் பேசினார். 

“ நெல் மண்டிகளை மூடுமாறு மிகவும் நய வஞ்சகமாக இந்த விவசாயச் சட்டங்களை அவர்கள் வடிவமைத்து உள்ளார்கள் என்றும். விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையும் படிப்படியாக இனி போய் விடும்” என்றும், அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். 

“இதன் காரணமாக, இனி பதுக்கல் அதிகமாகும் என்றும், விவசாயிகள் செல்வாக்கு சரிந்து பணக்காரர்களின் செல்வாக்கு தான் இனி அதிகரிக்கும்” என்றும், அவர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார். 

இது தொடர்பாக பாஜக அரசின் உத்திரப் பிரேதச அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா கூறும் போது, “விவசாயிகளை வைத்து நாடகம் நடத்தி வருகின்றனர் என்றும், காங்கிரசார் பிரதமரை எதிர்க்கட்டும் என்றும், மாறாக நாட்டைக் காட்டிக் கொடுக்கக் கூடாது” என்றும், பேசினார். 

இதனிடையே, “தேசத்துக்கு எதிராக மத்திய அரசு தான் செயல்படுகிறது” என்று, பிரியங்கா காந்தி பேசியுள்ளது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.