கொரோனா நெருப்பே அணையாத போது விலையேற்றம் என்ற பெட்ரோலையும் ஊற்றுகிறார்கள்! கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கு எரிபொருள் விலை ஏறுகிறது! மக்கள் சுமையைக் குறைக்க வேண்டியதே ஆள்வோரின் பொறுப்பு. வரிகளைக் குறைத்து பெட்ரோல் – டீசல் விலை ஏற்றத்தை மத்திய - மாநில அரசுகள் தடுக்க வேண்டும்! என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கட்டுக்குள் உள்ள நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையினை நாளுக்கு நாள் உயர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டு மக்களை வதைத்து வருகிறது பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. 


சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 22 காசுகள் உயர்ந்து 90 ரூபாய் 18 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் 83 ரூபாய் 18 காசுக்கு விற்பனையாகிறது.

பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் - டீசல் விலை ஏற்றம் மட்டும் காண்கிறதே தவிர, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாகக் குறைந்தாலும், சந்தையில் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கின்றன. மத்திய அரசின் கடுமையான வரி விதிப்பும், மாநில அரசு சார்பிலான வரி விதிப்புகளும் மக்களை வதைக்கும் விலை உயர்வுக்கு காரணம்.


மக்களின் சுமையைக் குறைக்க வேண்டியதே ஆள்வோரின் பொறுப்பு. உடனடியாக மத்திய மாநில அரசுகள் வரிகளைக் குறைத்து விலைக் குறைப்புக்கு வழி வகுத்திடுக ” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.