சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன், நிதி அகர்வால், பாரதிராஜா, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஈஸ்வரன் திரைப்படம், கடந்த 14ம் தேதி வெளியானது . சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி உள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார். இப்படம் சில தரப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு தடைகளைத் தாண்டி இப்படம் வெளியாகியுள்ள சூழலில், சிம்புவின் அறிமுகம், கிரிக்கெட் விளையாடும் காட்சி, பாம்பு பிடிக்கும் காட்சிகள் ரசிகர்களின் ஏகோபித்த கரவொலியைப் பெற்றுள்ளன. 

திரைப்படங்களை இயக்குவதை குறைத்துக் கொண்டுள்ள இயக்குநர் பாரதிராஜா, இந்த படத்தில் பெரியசாமி என்ற கதாபாத்திரமாக நடித்து கதைக்கு வலு சேர்த்திருக்கிறார். நிதி அகர்வாலும், நந்திதாவும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். எனினும் நந்திதா இடம்பெற்றுள்ள காட்சிகள் சற்று குறைவாக இருப்பதாக ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எளிமையான தோற்றத்துடன் சிம்புவின் கதாபாத்திரத்தை நன்றாகவே வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

பால சரவணனும், முனிஷ்காந்தும் நகைச்சுவை காட்சிகளில் கலக்கியுள்ளனர். நீ அசுரன்னா.... நான் ஈஸ்வரன் என சிம்பு பேசும் பஞ்ச் டயலாக் திரையரங்கை அதிர வைக்கிறது. பொங்கலை முன்னிட்டு விஜய்யின் மாஸ்டர் படம் திரைக்கு வந்தாலும், சிம்புவின் ஈஸ்வரன் படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 

இந்நிலையில் படத்தின் ஓப்பனிங் பாடலான தமிழன் பாட்டு வீடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அனந்து, தமன் மற்றும் தீபக் பாடிய இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். கடந்த வாரம் ஈஸ்வரன் வெற்றியை கொண்டாடும் வகையில் பொங்கல் சீர் தந்தனர் படக்குழுவினர். திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், படக்குழுவினர், ப்ரோடக்ஷன் யூனிட் மெம்பர்கள் என அனைவருக்கு பொங்கல் சீர் வரிசை வைத்துள்ளது ஈஸ்வரன் படக்குழு.