புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியான், உச்சிப்புளியைச் சேர்ந்த நாகராஜ், சாம்சன், செந்தில்குமார் ஆகியோர் கடந்த 18ம் தேதி  மீன் பிடிக்க சென்றுள்ளனர். 


நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையின் ரோந்து படகு வந்துள்ளது. அப்போது இலங்கையின் ரோந்து படகு தமிழக மீனவர்களின் படகுடன் மோதியதில், மீனவர்களின் படகு மூழ்கியதாக கூறப்படுகிறது. படகு மூழ்கியதால் 4 மீனவர்களும் கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.


படகு மூழ்கிய பிறகு மீட்கச்சென்ற படகுகளையும் இலங்கை கடற்படை விரட்டியடித்ததாக சக மீனவர்கள் கூறுகிறார்கள். கடலில் மூழ்கி மாயமான 4 மீனவர்களும் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடலில் மூழ்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் சடலமாக யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர். 


மீனவர்கள் இறப்புக்கு நீதி கோரியும், சடலத்தை சொந்த ஊர் கொண்டு வர வலியுறுத்தியும், கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


” இலங்கை கடற்படகு மோதி தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் அதி தீவிர நடவடிக்கை வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார். 


இலங்கை அரசும், இந்திய அரசும் கூட்டு சேர்ந்து தமிழக மீனவர்கள் மீதான கொடூர தாக்குதலை மூடி மறைக்க முயற்சிக்கிறதா? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்தியதற்கு இதுதான் பலனா? ” என்றுள்ளார்  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி 


இந்நிலையில், இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த மீனவர்கள் 4பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 10லட்சம் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.