இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை - மும்பை பலப்பரிட்சை! இரு அணிகளின் பலம் - பலவீனம் என்ன?
By Aruvi | Galatta | May 01, 2021, 02:24 pm
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணியும், 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும் பலப்பரீட்சை நடத்துவதால், எதிர்பார்ப்பு எகிர வைத்து உள்ளது.
கிரிக்கெட் உலகில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் போன்றது தான், ஐபிஎல் லில் சென்னை - மும்பை அணிகள் இடையிலான போட்டியும் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.
அதற்கு காரணம், கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய ஆண்டு முதல், இன்று வரை இவ்விரு அணிகள் மோதிக் கொள்ளும்போது, களத்தில் இருக்கும் அதே அனல், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்கிடையிலும் தீ பிளம்பாய் எரியும்.
அத்துடன், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றது சாதனை படைத்தது மும்பை அணி என்றால், அதிக முறை இறுதிப் போட்டிக்கு சென்றது சென்னை அணியாகத் திகழ்கிறது. ஆனால், இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் அதிக முறை வெற்றிக்கனியை பறித்தது மும்பை அணியாகவே திகழ்கிறது.
இது வரை சென்னை - மும்பை அணிகளும் 32 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில், மும்பை அணி 19 முறையும், சிஎஸ்கே 13 முறையும் வெற்றி பெற்றிருக்கிறது.
கடந்த சீசனில் இரு அணிகளும் சந்தித்துக் கொண்ட முதல் போட்டியில் சென்னை அணி சாம் கரணின் இறுதி நேர அதிரடிகளால் வெற்றி பெற, இரண்டாவது சந்திப்பில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பழி தீர்த்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
இன்றைய போட்டியை பொறுத்த வரையில், சென்னை அணி செம பார்ம்மில் இருக்கிறது என்றே கூற வேண்டும். அதே போல், கடந்த சீசனில் பேட்டிங் லைன் அப் என்று புகழ்ந்து தள்ளப்பட்ட அதே லைன் அப், இந்த முறை மிடில் ஆர்டரில் பார்ம் இழந்து தத்தளித்து கொண்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பையின் பவர்பிளே ஓவர்களின் சராசரி, 7.23 ஆகவும், சிஎஸ்கே வுக்கோ பவர்பிளே ஓவர்களின் சராசரி 7.5 ஆக இருக்கிறது.
முக்கியமாக, மும்பை விளையாடியுள்ள போட்டிகளில், ஆறில் 4 போட்டிகளில், எத்திரணியின் பேட்டிங் பவர்பிளே ஓவர்களில், ஒரு விக்கெட்கூட விழவில்லை. மீதமுள்ள 2 போட்டிகளிலும், மொத்தமே 3 விக்கெட்டுகளை மட்டுமே மும்பை எடுத்திருந்தது. எத்திரணியின் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த மும்பை, அதில் மூன்றை மட்டுமே முதல் ஆறு ஓவர்களில் எடுத்திருந்தது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், சென்னை அணியின் பக்கமோ, 6 போட்டிகளில் அவர்கள் வீழ்த்திய 42 விக்கெட்டுகளில், 14 விக்கெட்டுகளை, முதல் 6 ஓவர்களில் வீழ்த்தி இருந்தனர். மும்பையின் இந்தப் பலவீனத்தை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் குறி வைத்தால், தொடக்க ஓவர்களிலேயே, ரன்களைக் குவிக்கலாம். இதனால், இன்றைய போட்டிகள், ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.