ஐதராபாத் அணியில் கேதர் ஜாதவ் வரை அட்டகாசமாக அனைவரும் விளையாடினாலும், டேவிட் வார்னர் மட்டும் திணறிக்கொண்டே, ஐபிஎல்லில் 50 வது அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனைகளைப் படைத்து உள்ளார்.

14 வது ஐபிஎல் கிரிக்கெட்டின் 23 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் பலபரிச்சை நடத்தின. இந்த  போட்டியில், முதலில் டாஸ் வென்ற டேவிட் வார்னர், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன் படி, டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோவ் ஆகிய 2  பேரும் ஓபனிங் இறங்கினார்கள்.

பேர்ஸ்டோவ் 5 பந்தில் 7 ரன்களில் கேட்ச் ஆகி நடையைக் கட்டினார். அதன் தொடர்ச்சியாக, வார்னருடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். பின்னர் போக போக மணிஷ் பாண்டே சற்று அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஆனால், வார்னர் 

மட்டும் 44 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்து, சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தார். குறிப்பாக, வார்னரின் டைமிங் படுமோசமாக இருந்தது, பெரும் விமர்சனங்களைக் கிளப்பி விட்டிருக்கிறது. 

அப்போது, 15 வது ஓவரில் லாங்க் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார் வார்னர். இதன் மூலமாக, ஐபிஎல் போட்டிகளில் வார்னர் அடித்த 200 வது சிக்ஸ் இதுவாகும்.

அதே போல், 55 பந்துகளில் 57 ரன்களையே எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதனால் அவரது டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவே ஆக மந்தமான அரை சதமாக அமைந்து போனது. 

எனினும், இந்த அரை சதம் மூலமாக, வார்னர் இது வரை விளையாடிய 148 வது ஐபிஎல் போட்டியில், அவர் அடித்த 50 வது அரை சதம் இதுவாகும். அத்துடன், இந்த அரை சதம் தான், ஐபிஎல் போட்டியில் ஒரே வீரர் அடித்த முதல் 50 வது அரை சதம் என்ற சாதனையை வார்னர் நேற்றைய போட்டியின் மூலமாக தனதாக்கி உள்ளார்.

மேலும், டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களையும் வார்னர் கடந்து உள்ளார். நேற்றைய போட்டியில் விளையாடுவதற்கு முன் இந்த சாதனையைப் புரிவதற்கு அவருக்கு 40 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 

பின்னர், மணிஷ் பாண்டேவும் 46 பந்துகளில் 61 ரன்களில் எடுத்து ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 26 ரன்களும், கேதர் ஜாதவ் ஒரு போர், ஒரு சிக்ஸர் என்று 12 ரன்களும் விளாசினார்கள். இதனால், அந்த அணி 3 விக்கெட்டுக்களை இழந்து, 171 ரன்களை எடுத்திருந்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் - பாப் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடத் தொடங்கிய இந்த ஜோடி, அணியின் ரன் ரேட்டை மளமளவென உயர்த்திச் சென்றது. இந்த அதிரடியான ஆட்டத்தால் ஓபனிங் ஜோடி கெய்க்வாட், டூ பிளெஸிஸ் இருவரும் தங்களது அரை சதத்தைப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து அதிரடி காட்டிய கெய்க்வாட், ஐதராபாத்தை பந்து வீச்சை வெறும் பவுண்டரிகளால் ஈசியாக டீல் செய்தார். அவர் 44 பந்துகளில் 12 பவுண்டரிகளை
பறக்கவிட்டு 75 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் வந்த மொயின் அலி வெறும் 8 பந்துகளில் 3 பவுண்டர்களை பறக்கவிட்டு 15 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

பின்னர் சற்று நிமிடத்திலேயே நிலைத்து நின்று ஆடிய டூ பிளஸிஸ் 38 பந்துகளில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என்று மொத்தம் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா 17 ரன்களும், ஜடேஜா 7 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் சென்னை அணி 18.3 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலமாக, சென்னை அணி அட்டவணையில் முதலிடத்திற்குச் சென்று உள்ளது. ஆனால், ஐதராபாத் அணி கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.