ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலபரிட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணியில் ரோஹித் சர்மா - டி காக் ஒப்பனர்களாக களம் இறங்கினார்கள். 

மும்பை அணிக்காக இந்த ஆண்டு நடைபெற்ற முதல் போட்டியில் கிறிஸ் லின் சிறப்பாக விளையாடினார். மும்பை அணிக்காக அதிரடியாக விளையாடிய கிறிஸ் லின் அரைசதம் அடித்து அசத்தினார். ஆனாலும், டி காக் வந்த பிறகு, கிறிஸ் லின் நன்றாக ஆடியும் அவர் அணியில் இருந்து வெளியே அமர வைக்கப்பட்டு, அவருக்கு பதிலாக  டி காக் சேர்க்கப்பட்டார். ஆனால், அணியில் வாய்ப்பு கிடைத்த பிறகு தொடர்ந்து கடந்த 3 போட்டிகளில் டி காக் சொதப்பிக்கொண்டு வருகிறார். 

அதன் படி, நேற்று நடைபெற்ற போட்டியிலும் டி காக் 2 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து, சூர்யகுமார் களமிறங்கிய நிலையில். ரோஹித் உடன் ஜோடி சேர்ந்து பட்டையை கிளப்பினார். இதனால், டெல்லி அணியின் பந்துவீச்சு நாலாபுறமும் சிதற தொடங்கியது. இதன் காரணமாக, பவர்பிளே முடிவில் மும்பை அணி, ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 55 ரன்கள் சேர்த்திருந்தது. 

பின்னர், சூர்யகுமார் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவேஷ் கானின் பந்து வீச்சில் சூர்யகுமார் தனது விக்கெட்டை பறிக்கொடுத்து நடையை கட்டினார். அப்போது, களம் இறங்கிய இஷான் கிஷன் நிதானமாக விளையாடி நிலையில், அமித் மிஸ்ராவின் சுழலில் சிக்கி, கேப்டன் ரோகித் சர்மா 44 ரன்களுடன் வெளியேறினார். அதே ஓவரில் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

அத்துடன், இஷான் கிஷன் 26 ரன்களிலும், குர்னால் பாண்டியா 1 ரன்னிலும், பொல்லார்ட் 2 ரன்களிலும் அடுத்தடுத்து மும்பை அணி விக்கெட்டை பறிகொடுத்துத் தடுமாறிப் போனது. இதனால், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழந்து வெறும் 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

இந்த போட்டியில், 4 ஓவர்கள் வீசிய அமித் மிஸ்ரா, 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள். இன்னும் 7 விக்கெட்கள் எடுத்தால், ஐபிஎல்லில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய சாதனை இவர் வசமாகும். 

இதனால், வழக்கம் போல ஸ்பின்னர்களை களமிறக்கி டெல்லி அணியின் சோலியை முடித்துவிடலாம் என்று மும்பை புது கணக்கு போட்டது.

ஆனால், 2 ஸ்பின் அட்டாக் பேட்ஸ்மேன்கள் டெல்லி அணியில் இருந்தை அவர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.

அப்போது, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியில் ஷிகர் தவானும், ப்ரித்வி ஷாவும் களமிறங்கினர். 

இதில், ப்ரித்வி ஷா 7 ரன்கள் எடுத்திருந்தபோது 2 வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்துடன் ஷிகர் தவான் ஜோடி சேர்ந்து நிதானமாகவும், பொறுப்புடனும் விளையாடினர். 

அப்போது, 33 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித் அவுட்டானார். ஆனால், தவான் விடாமல் போராடி தனது பங்கிற்கு 45 ரன்களைக் குவித்து அவுட்டானார். பின்னர் வந்த கேப்டன் ரிஷப் பண்ட்டும், லலித் யாதவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, 19.1 ஓவர் டெல்லி அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் எளிதாக வெற்றிப் பெற்றது. 

இதன் மூலமாக, டெல்லி அணி 3 வது வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், டெல்லி அணி புள்ளி பட்டியலில் 2 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.