ஹாட்ரிக் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளதால், சென்னை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

14 வது ஐபிஎல் சீசனின் நேற்று நடைபெற்ற 15 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

அதன் படி, டுப்ளெஸ்ஸியும் - கெய்க்வாட்டும் வழக்கம் போல சென்னை அணியில் ஓப்பனிங் இறங்கினார்கள். முதல் ஓவர் மட்டுமே இருவரும் பொறுமையாக உள்வாங்கிக்கொண்ட நிலையில், அடுத்து வந்த கம்மின்ஸ் வீசய ஓவரிலிருந்து இந்த போட்டியே மொத்தமும் வீடியோ கேம் போல் மாறிப்போனது. கடந்த 3 போட்டியிலும் சொதப்பி வைத்த கெய்க்வாட், இந்த ஆட்டத்தில் அடக்கி வைத்த தனது அதிரடியைக் காட்டத் தொடங்கினார். 

அதுவும், கம்மின்ஸின் வீசிய முதல் ஓவரில் கெய்க்வாட் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 15 ரன்கள் விளாசினார். இதனால், பவர்பிளேயின் இறுதியில் சென்னை அணி, விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் சேர்த்திருந்தது. 

இதனையடுத்து, ஓவருக்கு ஓவர் ரன்ரேட் எகிறிக்கொண்டே இருந்தது. இதனால், எதிர் அணியில் யார் ஓவர் போட்டாலும் பவுண்டரி, சிக்ஸ் என டுப்ளெஸ்ஸியும் - கெய்க்வாட்டும் நொறுக்கித் தள்ளினர். 

டெத் ஓவர் மன்னன் ரஸல், இந்த முறை மிடில் ஓவரில் பந்து வீச வந்த நிலையில், அவரது பந்துகளை சிக்ஸுக்கு தூக்கி அடித்தார் கெய்க்வாட். இதனால், சென்னை அணி 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்களை குவித்திருந்தது. 

அப்போது 13 வது ஓவரை வீச வருண் வந்த போது, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், வழக்கம் போல தமிழில் வருணுக்கு அறிவுரை கூறி குறிப்பிட்ட திசையில், குறிப்பிட்ட அளவில் பந்து வீச அறிவுறுத்தினார். வருணும் அதன்படியே பந்து வீச, அதனை தூக்கி அடித்த கெய்க்வாட், கம்மின்ஸ் கேட்சில் அவுட்டானார். ருதுராஜ் கெய்க்வாட் 42 பந்துகளில்,  4 சிக்ஸ், 6 போர் என மொத்தம் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, மொயின் அலி களமிறங்கி அதிரடி காட்டினார். அவர் சந்தித்த எல்லா பந்துகளையும் தூக்கி அடித்து தூள் கிளப்பினார். அப்போது, இறங்கி அடிக்க ஆசைப்பட்டு ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார் மொயின் அலி. 

அதன் தொடர்ச்சியாக தோனி களமிறங்கி எடுத்ததுமே அதிரடியாக ஆட தொடங்கினார். தேனிக்காகவே கொல்கத்தாவால் அணியில் சேர்க்கப்பட்டிருந்த நரைன் பந்து வீச்சில் துளியும் பயமில்லாமல் அதிரடியாக விளையாடினார் தோனி. இதனால், நரைனால் இந்த முறை தோனியின் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. நரைன் ஓவரில் தோனி முதல் முறையாக பவுண்டரி அடித்து அசத்தினார். அதாவது, ஐபிஎல் வரலாற்றிலேயே நரைன் பந்தில் தோனி அடித்த முதல் பவுண்டரி இதுவேயாகும். நரைனின் 65 பந்துகளை இதற்கு முன்னர் சந்தித்திருக்கும் கேப்டன் தோனி, அவர் பந்துவீச்சில் அதிரடி காட்டியது இல்லை. ஆனால், இந்த முறை காட்டினார். இதனால், நரைன் வீசிய இந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது.

பின்னர், ப்ரசீத் கிருஷ்ணா ஓவரில் தோனி, தனது ஸ்டைலில் தூக்கி அடிக்க அது அட்டகாசமான சிக்ஸராக மாறியது. அடுத்து வந்த ரஸ்ஸல் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி தள்ளினார் டுப்ளெஸ்ஸி. அப்போர், தோனிக்கு மீண்டும் ஒய்டு லைனில் ரஸல் பந்து வீச அதனை தூக்கி அடிக்க முயன்ற தோனி, எதிர்பாராத விதமாக கேட்ச் ஆகி அவுட்டானார். தோனி 8 பந்துகளை சந்தித்து இருந்த நிலையில், 4 போர், 1 சிக்ஸ் என மொத்தம் 17 ரன்கள் எடுத்தார்.

பின்னர் ஜடேஜா களமிரங்கினார். இதில், டுப்ளெஸ்ஸி கொஞ்சம் சுய நலமாக நினைத்திருந்தால் 100 ரன்கள் எடுத்திருக்கலாம். ஆனால், அவரோ அணியின் நலனை கருத்திக்கொண்டு விளையாடினார். இததனால், போட்டியின் 19.5 பந்தில் அவர் சிங்கிள் போன நிலையில், தான் சந்தித்த போட்டியின் கடைசி பந்தை சிக்ஸராக மாற்றினார் ஜடேஜா. 

இதில், 60 பந்துகளை சந்தித்த டுப்ளெஸ்ஸி 9 போர், 4 சிக்ஸ் உட்பட 95 ரன்களை சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா எக்ஸ்டா 13 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தது. 

இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் சேர்த்திருந்தது. 

இதையடுத்து, 221 ரன்கள் எடுத்தால் வெற்றி கடினமான இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. கொல்கத்தா அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களான நிதிஷ் ரானா 9 ரன்னிலும், சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர். 

இவர்களை அடுத்து வந்த ராகுல் திருப்பதி 8 ரன்னிலும், கேப்டன் இயான் மோர்கன் 7 ரன்னிலும், சுனில் நரேன் 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதனால் 31 ரன்கள் எடுப்பதற்குள், 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிப்போனது கொல்கத்தா அணி.

பின்னர் வந்த ஆண்ட்ரே ரசல் - தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடியாக விளையாடி, சென்னை அணியின் ஸ்கோரை துரத்தி வந்தது. இதில், 22 பந்துகளில் 3 போர், 6 சிக்சர்களுடன் 54 ரன்களை அதிரடியாக சேர்த்த ஆண்ட்ரே ரசல், சாம் கர்ரனின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். 

அதே நேரத்தில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் மறுமுனையில் அதிரடி காட்டி வந்த தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 4 போர், 2 சிக்சர் என 40 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கம்மின்ஸ், சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் தெறிக்கவிட்டார். 34 பந்துகளில் 4 போர், 6 சிக்சர்களை தெறிக்கவிட்டு 66 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆனால், மறுமுனையில் சரியான பார்னர்ஷிப் அமையாததால், கொல்கத்தா அணி, 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 202 ரன்களை சேர்த்து சென்னை அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால், இதன் மூலம் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போராடி தோற்றது.

குறிப்பாக, ஹாட்ரிக் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் தற்போது முதலிடத்துக்கு முன்னேறி உள்ளதால், சென்னை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.