தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும் சிறந்த ஒளிப்பதிவாளருமான திரு  கே.வி.ஆனந்த் நேற்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.

கல்கி இந்தியா டுடே பத்திரிகைகளில் புகைப்பட கலைஞர்களாக தனது பயணத்தை தொடங்கிய கேவி ஆனந்த் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமின்  உதவி ஒளிப்பதிவாளராக தேவர்மகன் ,திருடா திருடா உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

இயக்குனர் ப்ரியதர்ஷனின் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான தென்மாவின் கொம்பது என்ற திரைப்படத்தின் மூலமாக  திரையுலகில்  ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருதும் பெற்றார்.

தொடர்ந்து தமிழில் காதல் தேசம் ,நேருக்குநேர், முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 2005 ஆம் ஆண்டு வெளியான கனாக்கண்டேன் திரைப்படம் மூலமாக இயக்குனராக களமிறங்கிய கேவி ஆனந்த் தொடர்ந்து அயன் ,கோ ,,மாற்றான், கவண், காப்பான் என வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார் .

அவருடைய மறைவு தமிழ் திரையுலகிலும் தமிழ்  திரை உலக ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேவி ஆனந்த் இயக்கத்தில் அயன் ,மாற்றான், காப்பான் என 3 படங்களில் கதாநாயகனாக நடித்த  நடிகர் சூர்யா இயக்குனர் கே வி ஆனந்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் "இது பேரிடர் காலம், என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது" 

ஏற்கமுடியாத உங்களது இறப்பின் துயரத்தில் மறக்கமுடியாத நினைவுகள் அலையலையாக உயிர்த்தெழுகின்றன . "உங்களது புகைப்படங்களில் தான் சரவணன் சூர்யாவாக மாறிய தருணம் நிகழ்ந்தது”. மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் “முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவனை” சரியான கோணத்தில் படம் பிடித்து விட வேண்டுமென  நீங்கள் கொட்டிய உழைப்பை இப்போதும் உயர்ந்து பார்க்கிறேன் . அந்த இரண்டு மணி நேரம் போர்க்களத்தில் நிற்பது போலவே உணர்ந்தேன், என்றார் சூர்யா.
 
 மேலும், “நேருக்குநேர் திரைப்படத்திற்காக நீங்கள் எடுத்த அந்த “ரஷ்யன் ஆங்கிள்" புகைப்படம் தான் இயக்குனர் வசந்த் மற்றும் தயாரிப்பாளர் மணிரத்தினம் ஆகிய இருவருக்கும் என் மீது நம்பிக்கை வர  முக்கியமான காரணம்”.

“முதலில் என் மீது பட்ட வெளிச்சம்  உங்கள் கேமராவில் இருந்து வெளிப்பட்டது. “அதன் மூலம் என் எதிர்காலம் பிரகாசமானது”. என்னுடைய திரையுலக பயணத்தில் உங்களின் பங்களிப்பும்  வழிகாட்டலும் மறக்கமுடியாதது”.
 
இயக்குனராக அயன் திரைப்படத்திற்கு நீங்கள் உழைத்த உழைப்பு ஒரு மாபெரும் வெற்றி காத்திருந்த எனக்குள் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது என்றார்.

சூர்யா நடிகராக அறிமுகமான நேருக்கு நேர் திரைப்படத்தில் கே வி ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். கே.வி. ஆனந்த் இயக்குனராக கடைசியாகப் பணியாற்றிய காப்பான் திரை படத்தில் சூர்யா நடித்துள்ளார் என்பதை,
“எனது முதல் திரைப்படத்தில் நீங்களும் உங்களின் கடைசி திரைப்படத்தில் நானும் பணியாற்றியது இயற்கை செய்த முரண்”. எங்கள் நினைவில் என்றும் வாழ்வீர்கள் சார் இதயப்பூர்வமான நன்றி அஞ்சலி

என்று மிகுந்த மனவேதனையில் அவருடைய இரங்கலில் குறிப்பிட்டுள்ளார் நடிகர்  சூர்யா.