தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திரு.விஜயகாந்த் அவர்களின் வலது காலில் உள்ள 3 விரல்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெளியிட்ட அறிக்கையில், “நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வேண்டி ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் முன்னணி பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்த் பூரண குணமடைந்து மீண்டு வர வேண்டி பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அந்த பதிவு இதோ…

 

என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

— Rajinikanth (@rajinikanth) June 21, 2022