இந்திய சினிமாவின் மூத்த இயக்குனராக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவரும் தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்த தயாரிப்பாளருமான T.ராமராவ் வயது மூப்பு காரணமாக காலமானார். தயாரிப்பாளர் ராமராவ் அவர்களின் மறைவுக்கு கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான்களான என்.டி.ஆர், ஏ.என்.ஆர், பாலகிருஷ்ணா, ஜெயப்பிரதா, ஜெயசுதா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றிய T.ராமராவ் நவராத்திரி, ஜீவன தரங்கலு,பிரம்மச்சாரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அறிமுகப்படுத்தியவரும் இவரே.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அந்த கானூன் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய T.ராமராவ், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் கூற்றுப்படி சென்னையை சேர்ந்தவர்கள் இந்தித் திரைப்படங்களை தயாரிக்கும் முறையான மதராஸ் மூவி-க்கு வழிவகுத்து அகில இந்திய சந்தைக்கு காரணமாக இருந்தவர். 

தொடர்ந்து தனது லட்சுமி புரொடக்ஷன்ஸ் சார்பில் தமிழில் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். குறிப்பாக விக்ரம் மற்றும் விஜய் ஆகியோர் நடித்த தில், யூத், அருள் ஜெயம்ரவியின் சம்திங் சம்திங் உள்ளிட்ட திரைப்படங்களை T.ராமராவ் தயாரித்துள்ளார். இந்நிலையில் தனது 83வது வயதில் வயது மூப்பு காரணமாக T.ராமராவ் காலமானார். அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றன.