“உயிர் மேல் அக்கறை இருந்தால் முகக்கவசம் அணியுங்கள்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை முன்எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் தீவிரமாக பரவிக்கொண்டிருந்த கொரோனா என்னும் தொற்று நோய் முதல் 3 அலைகளாக பரவிய நிலையில், முன்னதாக அதன் தாக்கும் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியது.

இதனால், தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள மக்கள் கொரோனா கெடுபிடிகள் இல்லாமல் சுதந்திரமாகவே உலா வந்தனர்.

அத்துடன், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது, கடந்த 2 மாதங்களாக முற்றிலுமாக சரிவைக் கண்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று உயரத் தொடங்கி இருக்கிறது.

இதன் காரணமாக, “நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என்று, மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் தான், “உயிர் மேல் அக்கறையும், ஆசையும் இருந்தால் முகக்கவசம் அணியுங்கள்” என்று, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கையாகவே கூறியுள்ளார்.

இது தொடர்பாக, இன்றைய தினம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “மக்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் இல்லை என்றும், அபராதம் விதிக்கப்படுவதில் இருந்து மட்டுமே மக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என்றும், மற்றபடி அனைவரும் முகக்கவசம் அணிவது என்பது ஒவ்வொருவரும் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்கு செய்ய வேண்டிய முக்கிய கடமை” என்றும், தெளிவுப்படுத்தினார்.

மேலும், “தமிழகத்தில் அபராதம் விதித்து தான் தீர வேண்டும் என்ற மனநிலைக்கு பொது மக்கள் வரக்கூடாது” என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, “கட்டாயம் என்று கூறி மக்களை வற்புறுத்தி கைது செய்வோம், அபராதம் விதிப்போன் என கூறிய பிறகு தான், நான் என்னுடைய உயிரை காப்பற்றிக்கொள்ள முயற்சிப்பேன் என்று சொல்வது தவறு என்றும், முகக்கவசம் என்பது பொது மக்களுக்கான விஷயம் என்றும், அவரவர் தங்கள் உயிர் மேல் அக்கறை இருந்தால், ஆசை இருந்தால் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்பது தான் உலக நியதி” என்றும், தெளிவாக எடுத்துக்கூறினார். 

“முகக்கவசம் இப்போது எல்லோரும் அணிந்து கொள்வது அவசியம் என்றும், வட மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்றும், தமிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்படவில்லை” என்றும், அவர் எடுத்துக்கூறினார்.

“முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வலியுறுத்தினார்.

அதே போல், “தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கடிதம் அனுப்பி உள்ளார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனுப்பி உள்ள கடிதத்தில், “தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிய கொரோனா பாதிப்புகளை கண்காணிக்கவும், தொற்று பரவுவதை குறைக்க தேவையான கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும், வலியுறுத்தி உள்ளார்.

“முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்துவது போன்ற தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டு உள்ளார்.

அத்துடன், “முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களை கண்டறிந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி, மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் போன்றவற்றை தீவிரப்படுத்த வேண்டும்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “அனைத்து மாவட்ட மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் மருத்துவக் கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என்றும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

இதனிடையே, டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 7.72 சதவீதமாக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.