தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் முன்னதாக நடன  இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்துள்ள ஹே சினாமிகா திரைப்படம் கடந்த மார்ச் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

மேலும் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருங்காப்பியம் மற்றும் கோஷ்டி உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதனையடுத்து தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ராம்சரணுடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்துள்ள ஆச்சாரியா திரைப்படம் வருகிற ஏப்ரல் 29-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.மேலும் தமிழில் பாரிஸ் பாரிஸ், பாலிவுட்டில் உமா என காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படங்கள் விரைவில் ரிலீசாகவுள்ளன.

முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான கௌதம் கிட்சுலுவை காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டார். மேலும் தற்போது நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு வளைகாப்பு நடைபெற்றது. தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஃபோட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். 

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால்-கௌதம் கிட்சுலு தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தைக்கு தாயான காஜல் அகர்வாலுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. மேலும் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.