தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாகவும் அடுத்தடுத்து நகைச்சுவை மையப்படுத்திய பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக சந்தானம் நடிப்பில் விரைவில் ரிலீசாக உள்ள திரைப்படம் ஏஜென்ட் கண்ணாயிரம்.

முன்னதாக தெலுங்கில் ஸ்பை த்ரில்லர் நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் தயாராகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் திரைப்படத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் குலுகுலு.

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த படங்களான மேயாதமான் & ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார், தொடர்ந்து எழுத்தாளராகவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை & வசனங்களை எழுதியுள்ளார். 

குலு குலு படத்தில் அதுல்யா சந்த்ரா கதாநாயகியாக நடிக்க, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் ,மரியம் ஜார்ஜ், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா சேஷு, TSR ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள குலு குலு படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

கலகலப்பான என்டர்டெய்னிங் திரைப்படமாக தயாராகியிருக்கும் குலு குலு திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குலுகுலு படத்தின் டப்பிங்கை சந்தானம் தொடங்கிய நிலையில் தற்போது படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதால் விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.