விவசாயிகள் மீது கார் ஏற்றிக்கொல்லப்பட்ட வீடியோவை வெளியிட்ட செய்தியாளர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளதால், உத்தரப் பிரதேசத்தில் மேலும் பதற்றம் அதிகரித்து உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா விவசாயிகள் மீது கார் ஏற்றிய கொலை செய்த வீடியோ காட்சிகள் நேற்றைய தினம் வெளியாகி, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதாவது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் திடீரென்று விசாயிகள் மீது புகுந்ததில், அப்பாவி விவசாயிகள் மீது கார் ஏறி அவர்கள் சம்பவே இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர். இதனால்,ஆத்திரமடைந்த விவசாயிகள் வாகனத்தை பிடித்து தீ வைத்து எரித்தனர். 

பார்ப்பவர்களின் நெஞ்சை உறைய வைக்கும் இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையதளத்தில் நேற்றைய தினம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

அத்துடன், விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

மேலும், விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் இன்னும் பாஜகவின் மத்திய அமைச்சர் மகன் கைது செய்யப்படாத நிலையில், ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் மிக கடுமையான கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன.

நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோவை பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, பாஜக எம்பி வருண் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்  தலைவர்கள் தங்களது டிவிட்டரில் நேற்றைய தினம் பகிர்ந்தனர். 

அந்த டிவிட்டர் பதிவில், “பாஜவினர் வந்த கார் விவசாயிகள் மீது வேண்டும் என்றே மோதிவிட்டு செல்வது தெளிவாக” தெரிய வந்தது.

இந்த வீடியோ காட்சிகள் யாவும் இணையத்தில் வைரலான நிலையில், “அந்த வீடியோவை வெளியிட்ட செய்தியாளர் ராமு காஷ்யப் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக” அவரது குடும்பத்தினர் தகவல்களை வெளியிட்டு உள்ளனர். 

“ராமுவின் கொலைக்கு உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும்” என்றும், அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

உயிரிழந்த செய்தியாளர் ராமு காஷ்யபிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொலைக்கான காரணமாக, “உத்தரப் பிரதேச கலவரம் மற்றுமு் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டதையும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மறுத்து வந்த நிலையில், நடந்த இந்த சம்பவத்திற்கு ஆதாரமாக செய்தியாளர் ராமு காஷ்யப், இந்த வீடியோவை வெளியிட்டு, அமைச்சரையும் அவரது மகனையும் வழக்கிலிருந்து தப்ப முடியாமல் செய்திருந்த காரணத்தினாலேயே, செய்தியாளர் ராமு காஷ்யப் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பதாகவும் கண்டன குரல்கள் எழுந்து உள்ளன.

பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் மகனுக்கு எதிராக கலவரம் தொடர்பான வீடியோவை வெளியிட்ட செய்தியாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல்களால், உத்திரப் பிரதேச மாநிலத்தில் மேலும் பதற்றம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.