'பாஜகவில் இணைவது குற்றம் என்றும், எனது தவறுக்கு பிராயசத்தமாக தலையை மொட்டையடித்துக்கொண்டதாக” கூறிய பாஜக எம்எல்ஏ ஆஷிஷ் தாஸ், “2023 ஆம் ஆண்டு பாஜக அரசு அகற்றப்படும் வரை மொட்டை தலையுடனே இருக்கப் போவதாக” தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் மத்திய அமைச்சர் மகன் விவசாயிகள் மீது கார் ஏற்றிய கொலை செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பத்திற்கு பாஜகவிற்கு பெரும் கண்டன குரல்கள் நாடு முழுவதும் எழுந்து உள்ளன.

இந்த நிலையில் தான், திரிபுரா மாநிலத்தின் சூர்மா தொகுதி எம்எல்ஏ வாக இருக்கும் பாஜகவை சேர்ந்த ஆஷிஷ் தாஸ் என்பவர், இந்த கலவரத்தில் பாஜக மீது கடும் அதிருப்திக்கு ஆளாகி இருக்கிறார். 

பாஜக மீது அதிருப்தியில் உள்ள ஆஷிஷ் தாஸ், திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தேப் மீது தொடர்ச்சியாக விமர்சனங்களை முன் வைத்து வந்தார். 

இவர், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவர் மேற்கு வங்கத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், கொல்கத்தாவில் உள்ள காளிகாட் காளி கோயிலுக்கு சென்ற ஆஷிஷ் தாஸ், விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவத்தில் பாஜக மீது இன்னும் வெறுப்படைந்து, தனது தலைக்கு மொட்டையடித்து கொண்டார்.

இதனையடுத்து, தனது மொட்டைக்கு விளக்கம் அளித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜவில் இருந்து நான் விலகுவதாக” பகிரங்கமாக அறிவித்து உள்ளார். 

மேலும், “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும்” அவர் கூறினார்.

அத்துடன், “பல எம்எல்ஏக்களும் வருங்காலத்தில் பாஜகவில் இருந்து விலகுவார்கள்” என்றும், அவர் வெளிப்படையாகவே பேசினார். 

“பாஜகவில் இணைவது குற்றம் என்றும் தனது தவறுக்கு பிராயசத்தமாக தலையை மொட்டையடித்துகொண்டதாகவும்” அவர் அப்போது விளக்கம் அளித்தார். 

மிக முக்கியமாக, “வரும் 2023 ஆம் ஆண்டு பாஜக அரசு அகற்றப்படும் வரை, நான் இந்த மொட்டை தலையுடனே இருக்கப் போவதாகவும்” ஆஷிஷ் தாஸ் மிக கடுமையாகவே கூறியுள்ளார். 

இந்த நிலையில், அவர் இன்றைய தினம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணையக் கூடும் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதாவது, மேற்கு வங்க சட்டப் பேரவை இடைத் தேர்தல் வெற்றிக்கு பிறகு, அந்த மாநிலத்தை சேர்ந்த பாஜகவினர் கட்சியில் இருந்து விலகிய நிலையில், அந்த மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவது வாடிக்கையாகி வருகிறது. 

அந்த வகையில், தற்போது இடைத் தேர்தலில் மம்தா பெற்றுள்ள மாபெரும் வெற்றி, வரும் 2024 ஆம் ஆண்டுக்கான பிரதமர் தேர்தலில் அவரது பங்கு முக்கியமானதாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், மேற்கு வங்கத்தை தாண்டி பிற மாநிலங்களிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தற்போது தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.