இந்திய திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஹன்சிகா மோட்வானி. தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் ஹன்சிகாவின் படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயார் நிலையில் உள்ளன.

ஹன்சிகாவின் 50வது படமாக வெளிவர இருக்கும் மஹா திரைப்படம் மற்றும் உலக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 மினிட்ஸ் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. இந்நிலையில் இன்று தனது புதிய திரைப்படத்தை தொடங்கினார் ஹன்சிகா மோத்வானி.

அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ்.P.பிள்ளை தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ரவுடி பேபி என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் J.M.ராஜ சரவணன் எழுதி இயக்கும் ரவுடி பேபி படத்திற்கு P.செல்லத்துரை ஒளிப்பதிவு செய்கிறார். ரவுடி பேபி படத்திற்கான பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுத பிரபல இசையமைப்பாளர் சாம்.C.S. இசையமைக்கிறார்.

இந்நிலையில் இன்று ரவுடி பேபி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ரவுடி பேபி படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. தொடர்ந்து ரவுடி பேபி படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.