“என்னையும், எங்கள் குடும்பத்தினரைத் துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்” என்று, ராகுல் காந்தி கூறியதைத் தொடர்ந்து, லக்கிம்பூர் செல்ல ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் மத்திய அமைச்சர் மகன் விவசாயிகள் மீது கார் ஏற்றிய கொலை செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இதனையடுத்து, லக்கிம்பூர் செல்ல முயன்ற பிரியங்கா காந்தியை சிறைப்பிடித்த அந்த மாநில போலீசார், அவரை வீட்டுக் காவலில் வைத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இது, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சியினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்க லக்கிம்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இன்று செல்லவிருந்த நிலையில், அவரது பயணத்திற்கு அம்மாநில அரசு இன்று காலை அனுமதி மறுத்தது.

இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய ராகுல் காந்தி, “நான் லக்கிம்பூர் செல்ல உள்ளதாக” உறுதிப்படத் தெரிவித்தார். 

“ஜீப்பால் மோதி விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்யப்பட்டனர் என்றும், ஆனால் விவசாயிகள் கொல்லப்பட்ட வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் இது வரை கைது செய்யப்படவில்லை” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, இந்த குற்ற பின்னணியில் உள்ள மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் கைது செய்யப்படவில்லை” என்றும், வெளிப்படையாகவே அவர் அறிவித்தார். 

“இச்சம்பவம் நடந்த லக்கிம்பூர் செல்ல எனக்கும் உபி அரசு விதித்த தடை உத்தரவு பொருந்தாது என்றும், அரசியல் தலைவர்களை உத்தரப் பிரதேசத்தில் அனுமதிக்க மறுப்பது ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், “என்னையும் என் குடும்பத்தினரையும் துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம் என்றும், இந்த விசயத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை என்றும், இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நியாயம்தான் கேட்கிறோம்” என்றும், ராகுல் விளக்கம் அளித்தார்.

மிக முக்கியமாக, “எதிர்க்கட்சிகளின் பணியே, அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தான் என்றும், எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் தான் இன்று அரசு தரப்பில் இந்த அளவிற்கு கூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றும், ராகுல் வெளிப்படையாகவே கூறினார். 

“ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் அரசு கட்டுப்படுத்துகிறது என்றும், இவ்விவகாரத்தில் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு தனது அகங்காரத்தின் காரணமாக நிராகரிக்கிறது” என்றும், ராகுல் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, “பிரதமர் நரேந்திர மோடி லக்னோவைப் பார்வையிடச் சென்றார் என்றும், ஆனால் உழவர் பாதிக்கப்பட்ட லக்கிம்பூருக்குச் செல்லவில்லை” என்றும், குற்றம்சாட்டினார்.

அது போல், “இந்தியாவில் விவசாயிகள் பலரும் கொல்லப்படுகின்றனர் என்றும், இந்தியாவில் இப்போது நிலவுகிறது சர்வாதிகாரம்” என்றும், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அதே நேரத்தில், “இந்தியா ஒருபக்கம் அரசு 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது என்றும், ஆனால் மறுபக்கம் லகிம்பூர் கேரி செல்லும் அரசியல் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்” என்றும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

இந்த நிலையில் தான், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேர் லக்கிம்பூர் செல்ல, உத்தரப் பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது. 

இந்நிலையில், “ராகுல் காந்தி லக்னோ விமான நிலையம் வந்த நிலையில், அவரை போலீசார் தடுத்த நிறுத்தினர். இதனால், அவர் விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது.