இருசக்கர வாகனத்தில் சென்று செல்ஃபோனை பறிக்க முயற்சித்தபோது, பெண்ணை சாலையில் 150 மீட்டர் தூரம் கொள்ளையர்கள் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக இருசக்கர வாகனத்தில் வந்து நகைகள் மற்றும் செல்ஃபோன்களை பறித்துக்செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 

இருசக்கர வாகனத்தில் மெதுவாக வருவது போல வந்து, சாலையில் நடப்பவரின் அருகில் வந்து செல்ஃபோன், நகைகளை பிடுங்கிவிட்டு வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்லும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.

டெல்லி, சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் பைக் ஸ்னாட்சிங் அதிகரித்துள்ளது. அதிலும் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் தங்க நகைகள், செல்ஃபோன்களை இந்த கும்பல் குறி வைத்து திருடுவதும் வழக்கம் ஆகி உள்ளது. இப்படி ஒரு சம்பவம்தான் தலைநகர் டெல்லியில் நடைபெற்று உள்ளது.

mobile snatching

டெல்லியில் மக்கள் அதிகம் நடமாடும்  ஷாலிமர் பாக் பகுதியில் கடந்த வியாழக்கிழமை மாலை பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் தீடீரென சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் இருந்த செல்ஃபோனைப் பறித்தனர். ஆனால் செல்ஃபோனை அந்த பெண் விடுவதாக இல்லை.

இதனால் அந்தப் பெண்ணை சாலையில் சுமார் 150 மீட்டர் தூரம் வரை தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளிலும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து உடனடியாக  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் செல்ஃபோனை பறிகொடுத்த அந்தப் பெண் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. 

snatching delhi woman

23 வயதான அந்தப் பெண் மருத்துவமனையில் பணி முடிந்தபின்பு மாலை 5.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோதுதான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்ட அந்தப் பெண், அவர் பணிபுரிந்து வந்த மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டார்.

இருச்சக்கர வாகனத்தில் வந்து செல்ஃபோன் பறித்துச் சென்ற இருவரையும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் பிடிபட்ட விக்ரம் (37)  என்பவர் மீது 96 வழக்குகளும், சந்தீப் மீது 142 வழக்குகளும் ஏற்கனவே நிலுவையில் உள்ளது என்பது தெரிய வந்தது.  

இதையடுத்து சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் செல்ஃபோன் பறித்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

#WATCH | A mobile-snatching incident was reported in the Shalimar Bagh area, on December 16, at 1735 hours, where 2 men on a scooty dragged the victim on the road while snatching her phone: Delhi Police

(Source: CCTV Footage) pic.twitter.com/GYZDw6Uj0J

— ANI (@ANI) December 17, 2021