“நான் சிறையில் இருந்தபோது குளியலறையில் கேமரா பொருத்தப்பட்டு இருந்தது” என்று, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் ஷெரிப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ள சம்பவம், அந்நாட்டில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்  நவாஸ் ஷெரிப் மீது சில குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. அதில் ஒன்று தான், அவர் மீது சுமத்தப்பட்ட பனாமா ஊழல்.

இந்த பனாமா ஊழல் தொடர்பாக தொரடப்பட்ட வழக்கு, அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் முடிவில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கடந்த 2018 ஆம் ஆண்டு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அத்துடன், இந்த வழக்கில் நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் ஷெரிப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மருமகன் சப்தர்க்கு ஒராண்டு சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தனர். அப்போது, உடல் நலக்குறைவு காரணமாக நவாஷெரிப்க்கு கடந்த ஆண்டு ஜாமின் கிடைத்தது. இதன் காரணமாக, அவர் சிகிச்சைக்காக லண்டன் சென்றார். அங்கு, ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது.

இதே போல், அவன்பீல்ட் ஊழல் வழக்கு மற்றும் சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற மரியம் ஷெரிப், தற்போது கட்சி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக சிறையில் இருந்த நவாஷெரிப்பின் மகள் மரியம் ஷெரிப், தற்போது ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறி உள்ளார்.

அதாவது, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தன்னுடைய சிறை அனுபவங்கள் குறித்து மரியம் ஷரிப் பேசினார்.

அப்போது, “நான் 2 முறை சிறைக்குச் சென்று இருக்கிறேன். நான் ஒரு பெண்ணாக சிறையில் எப்படி நடத்தப்பட்டேன் என்பது பற்றிப் பேசினால், அவர்கள் முகங்களைக் காண்பிக்கும் தைரியம் இங்கே இருக்காது. அவர்கள், நான் தங்கியிருந்த சிறையிலும், குளியலறையிலும் ரகசிய கேமராக்களை நிறுவியிருந்தனர்” என்று, பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார். இந்த குற்றச்சாட்டுச் சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகாரை, அந்நாட்டின் எதிர் கட்சிகள் தற்போது கையில் எடுத்து உள்ளன. இதனால், அந்நாட்டின் சிறைத் துறையினருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, சிறைத்துறை அதிகாரிகள் அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், சிறைச்சாலை மற்றும் எனது குளியலறையில், கேமரா பொருத்தப்பட்டு இருந்து என்ற மரியம் ஷெரிப்பின் குற்றச்சாட்டுக்கு, இதுவரை சிறைத்துறை சார்பில் எந்த மறுப்பும் தெரிவிக்கப்பட வில்லை. 

அதே போல், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மகளுக்கு நடந்துள்ள இந்த துயர சம்பவத்திற்கு, தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் எந்த பதிலோ, ஆறுதலோ தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். இதற்கு எதிராகவும், அந்நாட்டு மக்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.