கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்,  தனது இரண்டு கண்கள் மூலம், 4 கர்நாடக இளைஞர்களுக்கு கண்பார்வை கிடக்க உதவி புரிந்துள்ள சம்பவம் சிலிர்க்க வைத்துள்ளது.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரபல உடற்பயிற்சி கூடத்தில், உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புனித் ராஜ்குமாருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த இந்திய திரையுலகம், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் புனித் ராஜ்குமாரின் ரசிகர்களிடையே  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உயிருடன் இருக்கும்போது பல்வேறு உதவிகளைச் செய்து வந்த நடிகர் புனித் ராஜ்குமார், இறப்பிற்குப் பிறகும் தனது கண்களை தானமாக வழங்கி 4 இளைஞர்கள் கண்பார்வை கிடைக்க உதவிப் புரிந்துள்ளார். புனித் ராஜ்குமார் இறந்துவிட்டார் என்ற வலியை தாங்கிக்கொண்ட நேரத்திலும், அவரது குடும்பத்தினர், புனித் ராஜ்குமார் இறந்ததும் அவரது கண்களை தானம் அளிக்க முன்வந்தனர்.  

p1

அதன்படி, புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்களும் பெங்களூருவிலுள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் வெள்ளிகிழமையன்று சேமித்து வைக்கப்பட்டன. மறுநாள் சனிக்கிழமை அன்று கண்பார்வை இல்லாத 4 பேருக்கு தானமளிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்திலேயே முதல் முறையாக, புதிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இரண்டு கண்கள் நான்கு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

அதாவது கருவிழியை இரண்டு துண்டுகளாக்கி முதல் பாதி (முன்பகுதி) ஒருவருக்கும், மற்றொரு பாதி (பின்பகுதி) இன்னொருத்தருக்கும் பொருத்தப்பட்டது. இதுபோல புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்களால் நான்கு பேருக்கு கண் பார்வை கிடைத்துள்ளது. இதுகுறித்து நாரயணா நேத்ராலயா மருத்துவமனை நிர்வாகி டாக்டர் புஜங் ஷெட்டி கூறுகையில், ‘வழக்கமாக தானம் பெறுவோர் மிகச்சரியாக கிடைப்பது சவாலாக இருக்கும். ஆனால் இம்முறை எல்லாம் தானாகவே அமைந்து விட்டது.

 ஒருவரது கண்விழி மிக நல்ல முறையில் இருந்து, அவர் இறந்ததும் தானம் அளிக்கப்பட்டால், அதன் மூலம் நான்கு பேர் கண்பார்வை கிடைக்க பெறலாம்.  கண் தானம் பெற்ற நான்கு பேரும் தற்போது நன்றாக இருக்கிறார்கள். அதே வேளையில் புனித் ராஜ்குமாரின் கண்களின் வெள்ளைப் பகுதியும் எடுக்கப்பட்டு, அவை ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அதில் இருக்கும் லிம்பெல் செல்கள் வளர்க்கப்பட்டு, அவை தீக்காயம் உள்ளிட்டவற்றால் கண்விழி பாதிக்கப்படுவோருக்கு பயன்படுத்தப்படும். குறிப்பாக தீபாவளி பண்டிகை வேளையில், பட்டாசுகள் வெடித்து கண் பாதிப்பு ஏற்படுவோருக்கு, இந்த செல்கள் மிகவும் பயன்படும்.

புனித் ராஜ்குமாரின் கண்களை தானம் பெற்ற 4 பேரும், கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர்கள் தான். நான்கு அறுவை சிகிச்சைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது. சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு தொடங்கி, மாலை 5.30 மணி வரை நடைபெற்றது’ என்று மருத்துவர் புஜங் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

நடிகர் புனித் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார், கடந்த 2006-ல் இறந்தபோது, ராஜ்குமாரின் கண்கள் தானம் பெறப்பட்டன. அதேபோல் புனித் ராஜ்குமாரின் தாயார் பர்வதம்மா, கடந்த 2017-ல் இறந்தபோதும், பர்வதம்மாவின் கண்கள் தானம் அளிக்கப்பட்டது. பெற்றோரின் வழியை பின்பற்றி, புனித் ராஜ்குமாரின் விருப்பத்தின்படி, அவரது கண்களும் தானம் அளிக்கப்பட்டது.

Puneeth

ராஜ்குமாரின் குடும்பத்தினரை கௌரவப்படுத்தும் வகையில், இந்த அறுவை சிகிச்சைகள் மருத்துவமனை சார்பில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவர் புஜங் ஷெட்டி கூறியுள்ளார்.  இறந்தப் பிறகு, அடக்கம் செய்வதற்கு முன்னரே, கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டு, நான்கு பேருக்கு கண் பார்வை கிடைக்க உதவி புரிந்துள்ளதால், அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.