“மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை வருகிற 26 ஆம் தேதிக்குள் திரும்ப பெறாவிட்டால், தலைநகர் டெல்லியை முற்றுகையிடுவோம்” என்று, விவசாயிகள் மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்திருக்கும் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்திய விவசாயிகளின் போராட்டம் கிட்டதட்ட 11 மாதங்களை கடந்து, தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் ஒரு ஆண்டை தொட உள்ளது.

இதுவரை மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும், தோல்வியில் முடிந்து போனதால், விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு துளியும் இறங்கி வரவில்லை என்றே விமர்சிக்கப்பட்டு வருகிறது. எனினும், “தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்” என்றும், விவசாயச் சங்கங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

மத்திய அரசின் இந்த விடாப்பிடியான போக்கைக் கண்டித்து, நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணியும் நடத்தினார்கள்.

அத்துடன், 3 புதிய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால், இந்த பிரச்சினையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. 

முன்னதாக கடந்த 18 ஆம் தேதி கூட “விவசாயிகள் மீது கார் ஏற்றிக்கொள்ளப்பட்ட சம்பவத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று, வலியுறுத்தி விவசாயிகள் நாடு முழுவதும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கியமாக பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை ஆக்கிரமித்து தொடர்ந்து போராடி வரும் நிலையில், இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தான், மத்திய அரசு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி வரை விவசாயிகளுடன் 11 கட்ட பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், இதில் எந்த பயனும் ஏற்படவில்லை.

இதனால், போராட்டத்தில் எந்த வித பின்னடைவும் இன்றி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 

அதே நேரம் விவசாயிகள் முகாமிட்டுள்ள திக்ரி, காசிப்பூர் எல்லைகளில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து உள்ளனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

பின்னர், நீதிமன்றத்தின் கண்டிப்பை தொடர்ந்து திக்ரி, காசிப்பூர் எல்லைகளில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை போலீசார் அகற்றினர். அதேநேரம் போராட்டக்களங்களில் கடும் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், வீரியமாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் வருகிற 26 ஆம் தேதியுடன், ஓராண்டை எட்டுகிறது. இதையொட்டி தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு விவசாயிகள் மிக கடுமையான எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர்.

இது குறித்து விவசாய அமைப்புகளில் ஒன்றான பாரதிய கிசான் யூனியனின் தலைவரான ராகேஷ் திகாயத் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள பதிவில், “மத்திய அரசுக்கு நவம்பர் 26 ஆம் தேதி வரை அவகாசம் இருக்கிறது என்றும், அதன் பிறகு போராட்டத்தை பலப்படுத்தும் வகையில் டெல்லியை முற்றுகையிடுவதற்காக 27 ஆம் தேதி முதல் விவசாயிகள் தங்கள் கிராமங்களில் இருந்து டிராக்டர்களில் டெல்லியை சுற்றிலும் திரளுவார்கள்” என்றும், அறிவித்து உள்ளார்.

இதற்கு முன்பாக, “டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றால், நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்து, தானிய மண்டிகளாக மாற்றுவோம்” என்றும், விவசாயிகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.