குடிபோதையில் பள்ளிக்கு வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர், தனது அறையில் பள்ளி மாணவிகளோடு போதையாட்டம் ஆடிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் 80 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில், மாணவிகள் படிக்கும் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த பள்ளியில், பல மாணவிகள் 8 ஆம் வகுப்பில் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் பணியாற்றி வரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில், சுய நிலை மறந்து அடிக்கடி குடித்து விட்டு பள்ளிக்கூடம் வருவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இது தொடர்பாக, அவர் மீதும், அந்த பள்ளியின் மீதும் அங்குள்ள மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு புகார்கள்“ சென்றது. ஆனால், இது தொடர்பாக உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் தான், கடந்த வாரம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்த பள்ளியின் 8 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளை தன்னுடைய ரூமிற்கு அழைத்திருக்கிறார். 

அதன் படி, அந்த ரூமிற்கு சில மாணவிகள் சென்றதும், அந்த தலைமை ஆசிரியர் கடும் குடிபோதையில் காணப்பட்டிருக்கிறார்.

இதனையடுத்து, அந்த ரூமிற்குள் வந்த மாணவிகளை, தன்னோடு டான்ஸ் ஆடும் படி அவர் கட்டாயப்படுத்தியிருக்கிறார். 

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த மாணவிகள் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, “நீங்கள் எல்லாம் இப்படி என்னுடன் டான்ஸ் ஆடினால், உங்கள் எல்லோரையும் நான் பாஸ் போடுகிறேன்” என்று, அவர் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். 

இதனால், அங்கிருந்த ஒரு சில மாணவிகள் அந்த தலைமை ஆசிரியருடன் செல்போனில் போடப்பட்ட பாட்டிற்கு டான்ஸ் ஆடி உள்ளனர். 

அத்துடன், கடும் போதையில் இருந்த அந்த தலைமை ஆசிரியர், பள்ளி மாணவர்கள் தன்னுடன் டான்ஸ் ஆடுவதை, தன்னுடைய மற்றொரு செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டு உள்ளார். 

இதனையடுத்து, மாலையில் வீடு திரும்பிய மாணவிகள் தலைமை ஆசிரியரின் இந்த டான்ஸ் விவகாரத்தை, தங்களது பெற்றோர்களிடம் கூறி உள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர, மாவட்ட ஆட்சியரிடமும் அவர்கள் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் பேரில் அந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில், இந்த புகார் குறித்து உடனடியாக சம்மந்தப்பட்ட அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை, சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.