இந்தியாவில் கணக்கிடப்பட்ட ஆய்வின் அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டை காட்டிலும், 2020 ஆம் ஆண்டில் தான் அதிக அளவிலான விவசாயகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயம் செய்து நஷ்டப்பட்ட காரணத்தாலும் அல்லது போதிய அளவில் விளைச்சல் இல்லாமல் போனதாலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில், மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராடி வரும் விவசாயிகள் போராட்டமும் கிட்டதட்ட ஒரு ஆண்டை எட்ட உள்ளது. ஆனாலும், விவசாயிகள் போராட்டத்திற்கு நீதி கிடைத்தபாடில்லை.

இப்படியாக, மனதளவில் பாதிக்கப்படும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் விவசாயிகள் குறி வைத்து கொல்லப்படும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

அதன் படி, உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, பாஜகவினர் நடத்திய வாகன அணிவகுப்பில் மத்திய அமைச்சரின் மகன், தனது காரை போராட்டக்காரர்கள் மீது ஏற்றி இறக்கியதால், சம்பவ இடத்தில் 4 பேரும், இதனையடுத்து அங்கு போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 4 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 9 ஆகே உயர்ந்தது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் தான், இந்தியா முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது பற்றி நாடு முழுவதும் கணக்கிடப்பட்டது. அதன் படி நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டை காட்டிலும், 2020 ஆம் ஆண்டில் தான் அதிக அளவில் விவசாய கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

இப்படியாக, விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கும் இந்த எண்ணிக்கையானது, கடந்த அண்டை காட்டிலும் 18 சதவீதம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.  

கடந்த 2020 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியலை தேசிய குற்றப்பதிவு ஆணையம் தற்போது வெளியிட்டு உள்ளது. 

அந்த புள்ளி விவரங்களின் படியாக பார்க்கும் போது, இந்தியா முழுவதும் 5,098 விவசாயக் கூலிகள் கடந்த 2020 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன.

குறிப்பாக, கடந்த 2019 ஆம் ஆண்டில் 4,324 விவசாய கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்றும், ஆனால் இந்த எண்ணிக்கை குறையாமல் ஒரே ஆண்டில் 18 சதவீதம் அளவுக்கு விவசாயிகள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது மிகவும் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. 

முக்கியமாக, சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் 4,940 பேர் கடந்த 2020 ஆம் ஆண்டில் தற்கொலை செய்துள்ளனர் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. எனினும், அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.7 சதவீதம் இறப்பு விகிதமானது குறைந்து உள்ளது.

அதே போல், இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் குத்தகை விவசாயிகள் 828 பேர் தற்கொலை செய்து கொண்டிருந்தனர் என்றும், இந்த எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் 639 பேராக அதிகரித்து, தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. 

மேலும், மாநிலங்களின் அடிப்படையில் இறப்பு விகிதத்தினை கணக்கிடும் பொழுது மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் விவசாய கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டது கடந்த ஆண்டில் அதிகளவில் உள்ளது தெரிய வந்திருக்கிறது. 

அதே நேரத்தில், தமிழகத்தில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் 6 பேர் கடந்த 2019 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் 76 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் மூலமாக தெரிய வந்திருக்கிறது.