“விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவருக்கு ஜாமீன் வழங்கி இருக்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் வேதனையுடனும், கடும் கோபத்துடனும் இருக்கிறார்கள்” என்று, பாஜக தலைமையிலான மத்திய அரசை, காங்கிரஸ் பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி, மிக கடுமையாக சாடி உள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லகிம்பூரில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அன்று விவசாயிகள் நடத்திய பேரணியின் போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 அப்பாவி விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையத்து, அங்கு நடைபெற்ற கலவரத்தையும் சேர்த்து மொத்தமாக 9 பேர் வரை உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் யாவும் மிக கடுமையாக குரல் கொடுத்த நிலையில், மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்த அம்மாநில போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

என்றாலும், “இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பாஜக தலைமையிலான மத்திய அரசு எதுவும் செய்யவில்லை” என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வந்தது. எனினும், அவர் மத்திய அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.

இது தொடர்பான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் முன்னதாக ஜாமீன் வழங்கி உள்ளது.  அத்துடன், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம், போலீஸ் விசாரணையையும் நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.

இது குறித்து பேசிய நீதிபதி, “போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின்படி, ஆஷிஷ் மிஸ்ரா நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டு உள்ளது என்றும், ஆனால் போலீசாரின் விசாரணையில், உயிரிழந்தோரின் உடலில் ​​அத்தகைய துப்பாக்கி காயங்கள் எதுவும் இல்லை என்றும், இறந்தவர்கள் அல்லது காயமடைந்த நபரின் உடலில் காயங்கள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை” என்றும், நீதிபதி குறிப்பிட்டு பேசியிருந்தார்.

அத்துடன், “கார் டிரைவரை விவசாயிகள் மீது மோதத் தூண்டியதாக ஆஷிஷ் மிஸ்ரா மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது என்றால், கார் ஒட்டுநர் உட்பட இருவர் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டனர் என்றும், சம்மன் அனுப்பப்பட்ட உடன் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணை அதிகாரி முன் ஆஜரானார்” என்றும், நீதிபதியே கருத்து தெரிவித்தது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும், “இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், இதனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கலாம்” என்றும், நீதிபதியே இப்படி ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, “காரில் பயணித்த மூவர் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டதைக் கண்டு, கண்களை மூடிக்கொள்ள முடியாது என்றும், இந்தச் சம்பவத்தின் புகைப்படங்கள் போராட்டக்காரர்களின் மிருகத் தனத்தை தெளிவாகக் காட்டுகிறது” என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதே நீதிபதி மிக கடுமையாக குற்றம்சாட்டினார். இது, சக விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பல்வேறு தரப்பினரும் மிக கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

இந்த நிலையில் தான், “லக்கிம்பூர் வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு ஏன் முன்வரவில்லை?” என்றும், காங்கிரஸ் பொதுச்செயலாளார் பிரியங்கா காந்தி, கேள்வி எழுப்பி உள்ளார்.

ராம்பூர் பிரச்சார கூட்டத்தில் சற்று முன்னதாக பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியை பதவியில் இருந்து நீக்க, மத்திய அரசு முன்வர மறுப்பது ஏன்?” என்று, கேள்வி எழுப்பினார். 

“பிரதமர் மோடிக்கு இந்த தேசத்தின் மீது தார்மீக பொறுப்பு இல்லையா? என்றும், பொறுப்பை நிறைவேற்றுவது அவரது கடமை இல்லையா? என்றும், பிரியங்கா காந்தி மிக கடுமையாக சாடி உள்ளார். 

மேலும், “விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் கிடைத்து உள்ளது என்றும், இனி அவர் வெளிப்படையாக சுற்றித்திரிவார் என்றும், இதில் பாஜக தலைமையிலான மத்திய அரசு யாரை காப்பாற்றியிருக்கிறது?” என்றும், அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

குறிப்பாக, “அதிகார பாதுகாப்பில் அமைச்சரின் மகன் விவசாயிகளை கார் ஏற்றி நசுக்கினார் என்றும், ஆனால் ஆளும் கட்சியின் அதிகாரம் விவசாயிகளின் நீதிக்கான நம்பிக்கையை நசுக்கி உள்ளது” என்றும், சாடி உள்ளார்.

முக்கியமாக, “நாடு முழுவதும் விவசாயிகள் வேதனையுடனும், கடும் கோபத்துடனும் இருப்பதாகவும்” பிரியங்கா காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.