சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலருக்கும் ஆர்வம் உண்டு. உலக அளவில் பேட் மேன், சூப்பர் மேன், அயன் மேன், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா என பல சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும் இந்திய அளவில் பிரபலமான சூப்பர் ஹீரோ என்றால் அது சக்திமான் தான்.

1990-களில் வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடராக வெளிவந்து சூப்பர் ஹிட்டான சக்திமான் 90s கிட்ஸ்களின் ஆல்டைம் ஃபேவரட் சூப்பர் ஹீரோ என சொல்லலாம். சக்திமான் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் முகேஷ் கண்ணா நடித்த சக்திமான் தொலைக்காட்சி தொடர் பற்றிய நினைவுகளை இன்றும் ரசிகர்கள் நினைவு கூறுவர்.

இந்நிலையில் மீண்டும் சக்திமான் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகவுள்ள அறிவிப்பு நேற்று (பிப்ரவரி 10ஆம் தேதி) வெளியானது. இந்த முறை சக்திமான் தொலைக்காட்சி தொடராக இல்லாமல் திரைப்படமாக தயாராகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சோனி பிக்சர்ஸ் நிறுவனம் முகேஷ் கண்ணாவின் சக்திமான் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் திரைப்படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மூன்று பாகங்களாக தயாராக இருக்கும் சக்திமான் திரைப்படத்தின் சக்திமான் கதாபாத்திரத்தில் இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்திமான் திரைப்படத்தின் இந்த அறிவிப்பு இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுகுறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சக்திமான் திரைப்படத்தை அறிவிக்கும் வகையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் அசத்தலான டீசர் ஒன்றையும் வெளியிட்டது. அந்த டீசர் வீடியோ இதோ…