தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் H.வினோத் சதுரங்கவேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதனையடுத்து அஜீத் குமாருடன் முதல்முறை இணைந்த வினோத் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பின்க் படத்தின் தமிழ் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் அஜீத் குமாருடன் இயக்குனர் H.வினோத் இணைந்த திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூரின் பே பியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் வலிமை படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து ஹுமா குரேஷி, சுமித்ரா, யோகிபாபு, செல்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மிரட்டலான வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக்கேயா நடித்துள்ளார்.

நீரவ்ஷா ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள வலிமை திரைப்படம் கடந்த பொங்கல் வெளியீடாக ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து வலிமை திரைப்படம் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இன்னும் இரண்டு வாரங்களில் ரிலீசாக உள்ள நிலையில் வலிமை திரைப்படத்தின் இறுதி சவுண்ட் மிக்ஸிங் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இறுதி சவுண்ட் மிக்ஸிங் பணிகள் முடிந்து இயக்குனர் H.வினோத் உடன் அஜித்குமார் இணைந்து இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த புகைப்படம் இதோ...