“அரசு ஊழியர்களுக்கு இனி 12 மணி நேர பணி வழங்கப்படுவது தொடர்பாக” நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ள சம்பவம், சக அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலும் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இது தான், இந்தியாவில் பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சில தனியார் நிறுவனங்களில் வாரம் சனி மற்றும் ஞாயிறுகளிலும் விடுமுறை அளிக்கும் வழக்கம் தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான், நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, பேசிய ஒரு உறுப்பினர், “‘அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி ஆக உயர்த்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதா? என்று கேள்வி கேட்டு, அதற்கு விளக்கமும் கேட்டார்.

இதற்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுந்து, “அது போன்ற ஒரு திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் தற்போது இல்லை” என்று, பதில் அளித்தார்.

அத்துடன், இது தொடர்பாக மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் பேசும் போது, “இந்திய தூதரகங்கள் அளித்த தகவல் படி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 4 ஆயிரத்து 355 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர் என்றும், இவர்களில், 127 பேரின் உடல்கள் மட்டும் இறுதி சடங்குக்காக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது” என்றும், குறிப்பிட்டார். 

இதில், “அதிக அளவாக, சவுதி அரேபியாவில் இருந்து 1,237 பேர் உயிரிழந்து உள்ளனர்” என்றும், அவர் கூறினார்.

அத்துடன், “வெளிநாட்டு சிறைகளில் 7 ஆயிரத்து 925 பேர் இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர் என்றும், இதில் அதிக அளவாக ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் 1,663 பேர் இந்தியர்கள் உள்ளனர்” என்றும், அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான மர்மம் குறித்த கேள்விக்கு” பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன், “நேதாஜி தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோப்புகள் ஆகியவற்றை இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் இருந்து பெற மத்திய அரசு, தீவிரமாக முயற்சி செய்து வருகிறது” என்றும், அவர் தெரிவித்தார். 

இதனிடையே, “அரசு ஊழியர்களுக்கு இனி 12 மணி நேர பணி வழங்கப்படுவது தொடர்பாக” கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி, தற்போது அது தொடர்பான விளக்கம் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அளிக்கப்பட்டுள்ளது, சக அரசு ஊழியர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.