தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பீட்சா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இரண்டாவதாக வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் இந்திய அளவில் பல திரையுலகங்களையும் கவனிக்க வைத்தது.

தொடர்ந்து தனக்கே உரித்தான பாணியில் இறைவி, மெர்குரி என படங்களை இயக்கி வந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர் ஆவார். இதனிடையே தனது அபிமான நாயகரை இயக்கும் வாய்ப்பை பெற்ற கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய பேட்ட திரைப்படம் மெகா ஹிட்டானது.

தொடர்ந்து தனுஷுடன் இணைந்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் திரைப்படம் கடந்த ஆண்டு நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் 17 மொழிகளில் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்த மகான் திரைப்படம் நேற்று (பிப்ரவரி 10ஆம் தேதி) அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆனது.

கிட்டத்தட்ட 40 வயதிலிருந்து 60 வயது வரையிலான 20 ஆண்டுகால டிரான்ஸ்ஃபர்மேஷனில் கச்சிதமாக நடித்து ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கினார் சீயான் விக்ரம். மேலும் துருவ் விக்ரம் & பாபி சிம்ஹா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்த மற்ற நடிகர்கள் அனைவரும் அவரவர் பாத்திரங்களில் பொருந்தி நடிக்க மகான் திரைப்படம் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் மகான் திரைப்படத்தை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அருமையான திரைப்படம் அற்புதமான நடிப்பு சிறப்பு என குறிப்பிட்டு ஆமாம் தலைவருக்கு மகான் மிகவும் பிடித்தது. அழைத்ததற்கு நன்றி தலைவா என குறிப்பிட்டுள்ளார்.