ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

டெல்லியில்  அண்மையில்  நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்றும், அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்திருந்தார்.  ஆனால் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, அரசியல் தலைவர்கள்,  ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததோடு, எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர்.  

இந்நிலையில் ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிர்ப்பாக, நடிகர் பிரகாஷ் ராஜூம், அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து  ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், வீடுகளை உடைக்க முயற்சிக்காதீர்கள் உள்துறை அமைச்சரே,  நாங்கள் தைரியமானவர்கள். நீங்கள் இந்தித் திணிப்பை நிறுத்துங்கள். நாங்கள் தேசத்தின் பன்முகத் தன்மையை விரும்புகிறோம். நாங்கள் எங்கள் மொழியை நேசிக்கிறோம். எங்கள் அடையாளங்களை விரும்புகிறோம். என்று  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியை எங்கு பேச வேண்டும்? எங்கு கற்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? எனவும், ஒரே நாடு ஒரே மொழி திட்டத்தை செயல்படுத்தவே அமித்ஷா முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் இருக்கும் போது இதில் ஏன் கவனம் செலுத்துகிறீர்கள் என்றும் பிரகாஷ் ராஜ் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து கனிமொழி கருணாநிதி அவர்கள் ட்விட்டரில் ஹிந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும் என்று தெரிவித்தார். மேலும் தொடர்ந்து முதலமைச்சர் அவர்கள், அறிக்கையில்  ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழ் மக்கள் என்று அடிப்படையாக கொண்டு இயங்குகிறது தி.மு.க. அரசு மாநில உரிமை, மொழி உரிமை காப்போம், என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.