“ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும்” என்று, மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி இருந்த நிலையில், “இந்தி - இந்தியாவை இணைக்காது.. பிரித்துவிடும்” என்று, திமுக எம்.பி. கனிமொழி காட்டமாகவே பதில் அளித்து உள்ளார்.

இந்தியாவில் இந்தியைத் திணிக்க முற்பட்டபோது, தமிழ்நாட்டை தனி நாடாக அறிவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இந்தி மொழி பின் வாங்கிக்கொண்டது. இதனால், தமிழ்நாட்டை தனி நாடாக அறிவிக்கக் கோரிய போராட்டங்கள் அமைதியாகிப் போனது. ஆனால், தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு, பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் இந்தி மொழி பேசுபவர்கள் மெல்ல திணிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள அரச பணிகளுக்கு வேற மொழி பேசுபவர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இதில், அதிகம் வட மாநிலத்தவர்களே தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளில் பணி அமர்த்தப்பட்டதாகத் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல தமிழ் அமைப்புகள் அடிக்கடி போராட்டத்தில் குதிப்பது, தற்போது தமிழ்நாட்டில் வாடிக்கையாக நடக்கும் ஒரு விசயமாக மாறி உள்ளது.

இந்த நிலையில் தான், நேற்றைய தினம் “இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல” என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

அதாவது, நாடாளுமன்ற அலுவல் மொழி குழு கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷா, “மத்திய அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த பிரதமர் முடிவு செய்துள்ளார் என்றும், இதன் மூலமாக இந்தி மொழியின் முக்கியத்துவம் கூடும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, “இந்திய அமைச்சரவையின் செயல்பாடுகள் 70 சதவீதம் இந்தி மொழியிலேயே இருப்பதாகவும்” அமித் ஷா குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், “இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கான மொழியாக இந்தியை பயன்படுத்துவதற்கான நேரம் நெருங்கிவிட்ட என்றும், வெவ்வேறு மாநிலத்தவர்கள் தங்களுக்குள் பேசும் போது பயன்படுத்தும் மொழி இந்த நாட்டின் மொழியாக இருக்க வேண்டும்” என்றும், அமித் ஷா பேசியிருந்தார்.

இது, நாடு முழுவதும் பரவிய நிலையில், இந்தியாவில் பல மொழிகள் பேரும் பல்வேறு மாநிலங்கள் இருப்பதால், இந்தி மொழியை தாய் மொழியாக கொள்ளாத பல மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது இது பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ள நிலையில், வட மாநிலங்களைத் தவிர, தென் மாநிலங்களில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்த இந்தி மொழி கருத்துக்கு, கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து தெரிவித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி, “இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது, அது பிரிக்கத்தான் பயன்படும்” என்று, காட்டமாக கூறியுள்ளார்.

அத்துடன், “மத்திய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றும், திமுக எம்.பி. கனிமொழி, டிவிட்டரில் காட்டமாகவே பதில் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ள கருத்தில், “ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளது, இந்தியை தவிர பிற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதற்கான மத்திய அரசின் தந்திர மேயாகும்” என்றும், விமர்சித்து உள்ளார். 

“இந்த தந்திரங்களை தாய் மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள்” என்றும், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

அதே போல், கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையாவும், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.