கொரோனா இன்னும் நீங்கவில்லை, தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவுகிறது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியிருந்தது.  ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தது. அதனைத்தொடர்ந்து கொரோனா மற்றும் ஒமிக்ரான் கணிசமாக குறைந்ததையடுத்து தமிழ்நாடு அரசு கொரோனா கட்டுப்பாடுகளை விளக்கிக்கொண்டது. இருப்பினும் முககவசம் அணிவதும் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை மட்டும் செய்யவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

இந்நிலையில் ராம நவமி கொண்டாட்டத்தையொட்டி குஜராத் மாநிலம் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவில் நிறுவன தின விழாவில் காணொலி முலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கொரோனா பெருந்தொற்று மிகப்பெரும் நெருக்கடி. இந்த நெருக்கடி ஓய்ந்துவிட்டதாக நாங்கள் கூறவில்லை. தற்போது தொற்று பரவல் நின்றிருக்கலாம். ஆனால், அது மீண்டும் எப்போது பரவும் என்பது நமக்குத் தெரியாது.  கொரோனா தொற்று நாட்டை விட்டு முற்றிலும் நீங்கவில்லை,கொரோனா நெருக்கடி முடிந்து விட்டது என்று நாங்கள் கூறவில்லை. 

அதனைத்தொடர்ந்து பேசியவர் வடிவங்களை மாற்றி மீண்டும் அது பரவுகிறது. இதனால் பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் மக்கள் தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கைவிடக் கூடாது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 185 கோடி டோஸ் தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளது. இது ஒட்டு மொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உங்களின்  ஆதரவுடன் இது சாத்தியமாகி உள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.