“மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத் தேர்வுக்கு எதிராக, சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தீர்மானத்தை கொண்டு வந்தார்.

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி அன்று, 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 19 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 6 ஆம் தேதி முதல் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
அந்த வகையில், இன்றைய தினம் உயர் கல்வி, பள்ளி கல்வித் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்கிற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக, தற்போது தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. 

இன்றைய சட்டப் பேரவையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார். அதன் தொடர்ச்சியாக, இந்த தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களும் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்த மதிப்பெண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என பீடிகை போட்டு, பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு வெளியிட்டது” என்றும், குறிப்பிட்டார்.

“அதுவும், பிளஸ் 2 மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல், நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவது ஏற்புடையது அல்ல என்றும், அனைத்து மாணவர்களுக்கும் இது சமமான வாய்ப்பினை வழங்கிடாது” என்றும், தனது கருத்தினை முன்வைத்தார். 

அத்துடன், “தமிழகத்தில் 70 சதவீத மாணவர்கள், மாநில பாடத்திட்டங்களில் பயின்று வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த பொது நுழைவுத் தேர்வு முறை, பெரும்பான்மையானவர்களுக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும்” என்றும், தனது கருத்தை உறுதியுடன் முன்வைத்தார்.

“இதனால், பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை குறையும் என்றும், நீட் தேர்வைப் போன்றே, இதற்கும் மாணவர்கள் பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் சூழல் ஏற்படும் என்றும், இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவார்கள் என்றும், இதனால் மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு பொது நுழைவுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

“நுழைவுத் தேர்வு, பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு சம வாய்ப்பை வழங்காது என்றும், பயிற்சி மையங்கள் புற்றீசல் போல வளர மட்டுமே நுழைவுத் தேர்வு சாதகமாக அமையும் என்றும், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

இந்த தீர்மானத்துக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த தீர்மானம் பற்றி பேசிய அதிமுக எம்எல்ஏ கே.பி. அன்பழகன், “நுழைவுத் தேர்வால் ஏழை எளிய மாணவர்கள் பாதிப்படைவார்கள்” என்று, குறிப்பிட்டார்.

இதனையடுத்து, மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

அப்போது, பாஜக எம்.எல்.ஏக்கள், இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனால், பாஜக தவிர பிற கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன், இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.